தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்திய விழாக்கள், பண்டிகைகள்

View previous topic View next topic Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 5:04 pm

ரக்ஷாபந்தன்
-------------------
இந்திய விழாக்கள், பண்டிகைகள்
---------------------
சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

ராக்கி வரலாறு

ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும், அவர் எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் ‘சிர் ஹரன்’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் கிருஷ்ணன்.

ரக்ஷாபந்தன் விழா தொடர்பான மற்றொரு கதை, சித்தூர் ராணி கர்ணாவதி மற்றும் மொகலாய பேரரசர் ஹுமாயுனுடையது. விதவையான சித்தூர் ராணி கர்ணாவதி, தனது அரசாட்சியைப் பேரரசர் பகதூர் ஷா கைப்பற்ற போகிறார் என்பதை உணர்ந்த போது, அவர் பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். இதனால், பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும், அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார், பேரரசர் பகதூர் ஷா.

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ரக்ஷாபந்தன் சிறப்பு

ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர். மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள். முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ரவன் மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை. இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.


இந்திய விழாக்கள், பண்டிகைகள்
நன்றி ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 5:05 pm

காந்தி ஜெயந்தி
------------
இந்திய விழாக்கள், பண்டிகைகள்
-------------
நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி மற்றும் காந்தி ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

காந்திஜி பற்றிய சில தகவல்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.

அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922 ஆம் ஆண்டில் தொடங்கினார். இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

காந்தி ஜெயந்தி விழா மற்றும் கொண்டாட்டம்

காந்தி ஜெயந்தி திருநாளன்று, நமது மக்கள், தேசத்தந்தை அஞ்சலி செலுத்தும் விதமாக பல பிரார்த்தனை சேவைகளையும், சமூக செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை கெளரவிக்கவும் விதமாக, கலைப் பிரியர்கள் காந்திய கொள்கைகள் மற்றும் சுதந்திரத்திற்காக அவர் கையாண்ட வழிமுறைகளைப் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில், அஹிம்சை வழியில் செல்வோருக்கு, விருதுகளை வழங்குவர். காந்தியின் வாழ்க்கை மற்றும் அறவழிப் போராட்டங்களை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க எண்ணும் சிலர், பல இடங்களில் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்பு உரையாற்றுவர்.

பள்ளி, கல்லூரிகளில் காந்தி ஜெயந்தி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை, தேசிய விடுமுறை தினமாக அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் அறிவித்திருக்கிறது. மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ஆம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) சமீபத்தில் அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, அன்றைய தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். காந்திஜியின் அறநெறிகள் அனைவருக்கும் பரவ வேண்டுமென்று எண்ணி, மக்கள் தங்களது பிரியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

காந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்!!!

இந்திய விழாக்கள், பண்டிகைகள்
நன்றி ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 5:07 pm

ஆசிரியர் தினம்
-------------
இந்திய விழாக்கள், பண்டிகைகள்
---------------

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இந்திய விழாக்கள், பண்டிகைகள்
நன்றி ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 5:08 pm

குடியரசு தினம்
------------
இந்திய விழாக்கள், பண்டிகைகள்
--------------
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

இந்திய விழாக்கள், பண்டிகைகள்
நன்றி ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 5:10 pm

சுதந்திர தினம்
-----------
இந்திய விழாக்கள், பண்டிகைகள்
------------
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆரம்பகால இந்தியா

‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.

மேலைநாட்டவர்களின் வருகை

விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. ‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி

ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில், நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்

முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.

1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.

முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்

உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைதல்

சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

இந்திய விழாக்கள், பண்டிகைகள்
நன்றி ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by ஜேக் Mon Jan 04, 2016 6:36 pm

தொடர்ந்து எழுதுங்கள் ... அறிந்து கொள்கிறோம். கைதட்டல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்திய விழாக்கள், பண்டிகைகள் Empty Re: இந்திய விழாக்கள், பண்டிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum