தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமுருக கிருபானந்த வாரியார்

View previous topic View next topic Go down

 திருமுருக கிருபானந்த வாரியார் Empty திருமுருக கிருபானந்த வாரியார்

Post by முழுமுதலோன் Wed Feb 13, 2013 4:46 pm

திருமுருக கிருபானந்த வாரியார்

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.

பிறப்பும் கல்வியும்

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்.

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.

சொற்பொழிவாளர்

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். (தேனி வரசித்தி விநாயகர் பேட்டை நவராத்திரித் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.)

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.


பெண்களை மதித்தவர்

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது” என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.

பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். “மலரினும் மெல்லிது காமம்” புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

“தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.”

தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.

முருகப் பெருமான்

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். “ஆண்பிள்ளை” அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.




குழந்தைப் பற்று

வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.

இசைப்பயிற்சி

இவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.

இசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி”

வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,

“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”

என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார்? சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.

சைவ சித்தாந்தம்

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

இசுலாமியர் கருத்து

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.




தமிழ் பற்றாளர்

வாரியார் தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு. தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.

தமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். “அப்பனே! வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். “அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ” என்றார். அவர் அடியார்.

அவர். “அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே” என்றார். “நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்” என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே? ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே? அவர்களுடன் பேசத்தான் தமிழ் கற்றுக் கொண்டார். இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள். முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார். கந்தக் கடவுள் வந்தார். எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார். முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் அகத்தியம் என்று ஓர் இலக்கணம் செய்தார். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.

நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் “ப” இப்படி போட்டால் “H” . இப்படிப் போட்டல் “L”. இப்படிப் போட்டால் “ட”. அறிவுக்குச் சிந்தனை. “அ” கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.

“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” - தொல்காப்பியம்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” - திருக்குறள்.

“அகர உயிர்போல் இறை” -திருவருட்பயன்.

“அகரமு மாகி, அதிபனு மாகி” - அருணகிரியார்.

சில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார். அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார். நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. இங்கு உயர்ந்த நிலை எது? மலை. “தணிகை மால் வரையே” என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர்? ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெருமானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.

“சேயோன் மேய மைவரை உலகு” தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார்.

- இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.

அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! “அம்மை” யில் வரும் “ஐ” இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், “ஐ” க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார்.

இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,

“தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்” என்று கம்பர் கூறுகிறார். “தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?” என்று கண்ணதாசன் கேட்டார்,

அதை “தாம் அரைக் கண்ணால்”' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?” என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.

வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் “கிருபானந்த “லாரி” வருகிறது” என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.

வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.

எழுத்தாளர்

வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் “திருப்புகழ் அமிர்தம்” எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில நிகழ்ச்சிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

தமிழ்த் திரையுலக ஈடுபாடு

வாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த “சிவகவி” எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப “துணைவன்”, “திருவருள்”, “தெய்வம்”, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.

இறை வழிபாடும் இறை சேவையும்


20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.

வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் இருக்கச் செய்தார்.

உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், “இரை தேடுவதோடு இறையையும் தேடு” என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.

வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.

“இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்” என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.

மறைவு

உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.

“ஆன்மீக தமிழ்ப்பழம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 திருமுருக கிருபானந்த வாரியார் Empty Re: திருமுருக கிருபானந்த வாரியார்

Post by செந்தில் Thu Feb 14, 2013 12:23 pm

கைதட்டல் திருமுருக கிருபானந்த வாரியார் பற்றிய விரிவான பகிர்வுக்கு நன்றி கேசவன் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 திருமுருக கிருபானந்த வாரியார் Empty Re: திருமுருக கிருபானந்த வாரியார்

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 1:18 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 திருமுருக கிருபானந்த வாரியார் Empty Re: திருமுருக கிருபானந்த வாரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum