தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கீதை காட்டும் பாதை

View previous topic View next topic Go down

கீதை காட்டும் பாதை  Empty கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:04 am

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)


கீதை காட்டும் பாதை  Unbenannt

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்
குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும்.
இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்திஅமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி
அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்
வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக
மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த
யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு
கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்
படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,
சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்
நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை
துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,
விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது
ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை
அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.
அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால
நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்
கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,
விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல்
இருப்பான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by Muthumohamed Fri Jun 07, 2013 11:13 am

நல்ல பாதை தான் ஆனால் கடை பிடிப்பது கொஞ்சம் கடினம் தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:30 am

மேன்மையான யோக நிலை!

தவழும் குழந்தை ஓடுவதற்கு முன் உட்கார, நிற்க, நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் தெரிகிறது. யாருமே தவழும் குழந்தை நாளையே ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. ஆனால் தியானம் விஷயத்தில் மட்டும் பெரும்பாலான மக்களின் ஆசை அந்த அளவில் தான் இருக்கிறது. கட்டுக்கடங்காத மனம் ஒருசில பயிற்சிகளிலேயே உடனடியாக தியான நிலைக்கு வந்து விட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதில் தோல்வி வருவது இயற்கை என்றாலும் அந்த இயற்கை விளைவிலேயே சலிப்பும் அடைகிறார்கள்.

யோக நிலைக்கு செல்லும் முன் முதலில் வாழ்க்கை ஒரு ஒழுங்கு முறைக்குள் ஒரு வரம்புக்குள் வர வேண்டும். அப்போது தான் மனம் ஒழுங்கு நிலைக்கு வரும். அதன் பின் தான் அதற்கு அடுத்த நிலையான தியானம் அல்லது யோக நிலைக்குப் போக முடியும். ஸ்ரீகிருஷ்ணர் தியான யோகத்தில் அதை மறுபடியும் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஒழுங்கிற்கு உட்பட்ட உணவும், செயல்களும் உடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்கிற்கு உட்பட்டவனாய் இருப்பின் அவனுடைய யோகம் துயரை அழிக்கும்.

மனதை சிறிது சிறிதாக ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்த பின் தான் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒருவன் முயலவே முடியும். அப்போதும் கூட அது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் அதற்கான குறைந்த பட்சத் தகுதியைப் பெற்று விட்ட நிலை அது. விடாமுயற்சியால் முடியக் கூடிய யோக நிலையை மேலும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

எப்போது ஒருவனுடைய சித்தம் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு ஆத்மாவிலேயே நிலைத்திருக்குமோ, சகல ஆசைகளிலும் பற்று நீங்கியதாக இருக்குமோ அப்போது அவன் யோகி என்று சொல்லப்படுகிறான்.

சித்தத்தை அடக்கி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியின் யோக நிலைக்கு, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கே உவமையாகும்.

ஒரு கணமும் ஓரிடமும் நிலைத்து நிற்க முடியாமல் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டு இருக்கும் மனம், அதில் சந்தோஷம், இதில் சந்தோஷம் என்று பொய்யான அனுமானங்களில் முயன்று முயன்று ஏமாறும் மனம், தெளிவடைந்து வெளி நோக்கை விட்டு விட்டு உள் நோக்கிப் பயணிக்கும் போது யோகம் கைகூட ஆரம்பிக்கும். அனுபவத்தாலும், அறிவாலும் ஆசைகள் புதைகுழி என்று கவனமாக அவற்றில் இருந்து கவனமாக விலகி ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போது யோகம் முழுமையாக கைகூடுகிறது. அப்போது தான் மனிதன் யோகி ஆகிறான்.

அவனது யோக நிலைக்கு கீதை சொல்லும் இந்த உதாரணம் மிக அழகானது. ’காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு’ தங்குதடை இல்லாமல் சீரான ஒளியைத் தரக்கூடியது. திடீரென்று பிரகாசித்து திடீர் என்று அணையக்கூடிய அபாயநிலைக்குச் செல்லும் விளக்கின் ஒளி தெளிவாக எதையும் காட்டாது. தெரிவது என்ன என்று தெளிவாக அறிவதற்குள் அதன் ஒளிக் குறைவால் குழப்பம் அல்லது அரைகுறையாய் அறியும் தடுமாறும் நிலை காற்றில் அசையும் விளக்கில் அதிகம். காற்றின் வேகம் அதிகம் இருந்தாலோ பெரும்பாலும் விளக்கு அணைந்தே போய் இருட்டில் மூழ்க வேண்டி வரும். அப்போது விளக்கு இருந்தும், திரி இருந்தும், எண்ணெய் இருந்தும் கூடப் பயனில்லை.

யோக நிலை கூடிய மனிதனோ காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு போல எல்லா நேரங்களிலும் சீரான ஞான ஒளியுடன் திகழ்கிறான். ஞானம் அவ்வப்போது குறையும் பலவீனமோ, ஞானம் அணைந்தே போகும் அபாயமோ யோகியிடம் இல்லை.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் யோகத்தின் மேன்மையான நிலையை விளக்குகிறார்.

யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட சித்தமானது எங்கே பூரணமாய் லயித்து நிலைத்திருக்கிறதோ, எந்த நிலையில் ஆத்மாவினால் ஆத்மாவை அறிந்து ஒருவன் மகிழ்ச்சி அடைகிறானோ,

எந்த நிலையில் புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை புத்தியால் அறிகிறானோ, எதில் நிலைத்த பின் அவன் உண்மையில் இருந்து வழுவுவதில்லையோ,

எதை அடைந்த பின் மற்றொரு லாபம் உயர்ந்ததென்று கருத மாட்டானோ, எதில் நிலைத்த பின் பெரிய துக்கம் வந்தாலும் சஞ்சலப்பட மாட்டானோ,

அதை துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம் என்று அறிவாயாக. மனம் கலங்காமல் திடமாக ஒருவன் அந்த யோகத்தைப் பயில வேண்டும்.

புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை முட்டாள்கள் அடைய முடியாது. எத்தனை சந்தர்ப்பங்களில் புலன்கள் வழிப்போய் அவஸ்தையில் மாட்டிக் கொண்டாலும் அவன் அடுத்தது அப்படி இருக்காது என்ற மூட நம்பிக்கையில் மேலும் புலன்வழியிலேயே சந்தோஷத்தைத் தேடுகிறான். அனுபவங்கள் அவனுக்கு எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. பலர் பல சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாமல் அப்படியே பிறவிகள் தோறும் முயன்று ஏமாறுகிறார்கள்.

சித்தம் ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போதே நிலையான இன்பம் சித்திக்கின்றது. அது சாதாரண இன்பம் அல்ல பேரின்பம். அந்த நிலையை ஒருவன் அடைய முடிந்தாலும் விவரிக்க முடியாது. விவரித்தாலும் மற்றவர்க்கு விளங்க வைக்க முடியாது. சமுத்திரத்து தவளை கிணற்றுத் தவளைக்கு சமுத்திரத்தை எப்படி விவரிக்க முடியும். விவரிக்க முயன்றாலும் கிணறை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அறிந்த கிணற்றுத் தவளை கிணறு என்ற அளவுகோலால் அல்லவா சமுத்திரத்தை அளக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும். முடிகிற காரியமா அது!

யோக நிலையை அடைந்தவனுக்குப் பொய்யின் அவசியம் இருக்காது. எந்தப் பூச்சும் தேவை இருக்காது. எனவே உண்மையிலிருந்து விலகவோ, உண்மையைத் திரிக்கவோ அவன் முயலமாட்டான். மேலும் அந்த யோக நிலையை அடைந்த பின் வேறெதுவும் அதைக்காட்டிலும் லாபமாக இருக்க முடியாது. அதன் பின் எந்த துக்கம் வந்தாலும் உண்மையில் கலங்க வேண்டிய காரணம் இருப்பதாக யோகி நினைக்க மாட்டான். எல்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்த பின் சஞ்சலப்பட என்ன இருக்கிறது?

அந்த யோக நிலையை விளக்கிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணர் கடைசியில் ஒரே வாக்கியத்தில் அதற்கு விளக்கம் தருகிறார். துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம். எதெல்லாம் துக்கத்தை நம்மிடம் சேர்க்குமோ அதற்கு எதிர்மாறான யோகம் என்கிறார். துக்கமே வேண்டாம் என்று சொல்பவர் அடைய வேண்டிய யோக நிலை இது. அதை கலங்காத, திட மனதுடன் ஒருவர் கற்றுத் தேர்ந்தால் பின் கற்க எதுவுமில்லை. பின் பெற வேண்டியதும் எதுவுமில்லை.

இந்த யோக நிலையை, ஸ்ரீகிருஷ்ணர் போலவே, திருமூலரும் மிக எளிமையான சொற்களில் அழகாக விளக்குகிறார்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

எந்தக் கேடும், எந்த துக்கமும் வேண்டாம் என்று நினைப்பவன் முதலில் தன்னை அறிய வேண்டும். ஏன் என்றால் எல்லாத் தீமையும், எல்லாத் துக்கங்களும் மனிதன் தன்னை அறியாத குறைபாட்டால் தான் வருகின்றன. தன்னை அறியும் அறிவை, அந்த யோக நிலையை அடைந்த பின், அறிந்த அந்த ஆத்மநிலையையே போற்றி அவன் பூரண திருப்தியுடன் வாழ்வான்.

பாதை நீளும்....

- என்.கணேசன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:41 am

கீதை சொல்லும் தியான முறை


தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:

“சுத்தமான இடத்தில் உறுதியான ஆசனம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அது அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும் இருக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது துணி, மான் தோல், தர்ப்பை பரப்பி அதன் மேல் அமர்ந்து கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தைச் சுத்தம் செய்வதற்காக யோகத்தைப் பயில வேண்டும்.

உடம்பையும், தலையையும், கழுத்தையும் சமமாக அசைவில்லாமல் வைத்துக் கொண்டு, உறுதியோடு, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல், அமைதியான மனத்துடன், பயமற்றவனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாய், மனத்தை வசப்படுத்தி, என்னிடமே மனத்தைச் செலுத்தி, என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்.”

மனதைச் சுத்தம் செய்ய நம்மைத் தயார்ப்படுத்தும் தியான முறைக்கு முதலில் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை ஒரு ஆரம்பம். மனத்திற்கு நாம் தரும் ஒரு அறிவிப்பு. செய்யப் போகிற தியானம் பவித்திரமானது, தெய்வீகமானது என்று சொல்லும் சூட்சுமமான செய்தி. மேலும் பூச்சிகள், எறும்புகள், புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்கும் சுத்தமான இடம் வலியுறுத்தப் படுகிறது. அதே போல உறுதியான ஆசனம் உறுதியான மனநிலைக்கான ஆயத்தம். உறுதியில்லாத ஆசனம் அடிக்கடி மனதின் கவனத்தை சிதறடிக்க வல்லது என்பதால் உறுதியான ஆசனம் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். அதிக உயரம், அதிக தாழ்வு இரண்டும் தியானத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்.

துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும், உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான, அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது.

அடுத்ததாக உடம்பை நேராக இருத்திக் கொண்டு அமர்வது மிக முக்கியம். பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு விறைப்பாக உட்கார்ந்து கொள்ள முற்படுகிறார்கள். அது தவறு. விறைப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ள முடியாது. உடல் பழைய நிலைமைக்கு வர போராட ஆரம்பித்து விடும். உடல் தியானத்திற்கு அனுகூலமாக வேண்டுமே ஒழிய போர்க்கொடி உயர்த்தினால் தியானம் கைகூடாது. எனவே உடலை விறைப்பில்லாமல் இயல்பாக நேராக இருத்திக் கொள்ளப் பழகிக் கொள்வது முக்கியம்.

அதே போல ’மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதையும் அப்படியே எடுத்துக் கொண்டு முயற்சித்தால் தலைவலி, தலைசுற்றல் போன்றவை வந்து விடக்கூடும். பகவத்கீதைக்கு சங்கரர் தரும் விளக்கத்தில் முழுக் கவனத்தையும் மூக்கின் நுனிக்கு வரச் சொல்கிறார். அதுவே சரியாகப் படுவதாக முயன்று பார்த்த அனுபவஸ்தர்களும் கருதுகிறார்கள்.

கண்களை எல்லா திசைகளிலும் அலைபாய விடக் கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண் போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும் அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:42 am

புலனடக்கம், மனத்தை வசப்படுத்துதல் பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்து விட்டோம். அடுத்ததாக ”என்னிடமே மனத்தைச் செலுத்தி, என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்” ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப் பார்ப்போம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது அந்தப் பெயரைத் தரித்துக்கொண்டு இருக்கும் உருவத்தை என்று எண்ணுவதை விட எல்லாவற்றிற்கும் மூலமான சக்தியை என்று இதை எடுத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் இயங்குகிறதோ, எந்த சக்தி எல்லாவற்றையும் உருவாக்கி, காத்து, அழித்து பிரபஞ்சத்தை நடத்திக் கொண்டு இருக்கிறதோ அதில், அதன் தன்மையில், அதன் உண்மையில் அமைதியடைந்த மனம் லயிக்குமானால் அதனால் அறிய முடியாதது என்ன இருக்க முடியும்? உண்மையைத் தானாக இப்படி உணர முடிந்த பின் அடைய முடியாததும் என்ன இருக்க முடியும்? பின் அலைபாய மனதிற்கு முகாந்திரம் என்ன இருக்கிறது?

எனவே தான் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
இந்த விதமாக மனத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் யோகநிலையில் இருக்கும் யோகியானவன் மோட்சத்தை இறுதியாகக் கொண்டதும் என்னிடமுள்ளதுமான சாந்தியை அடைகிறான்.

சாந்தி என்பது திருப்தியுடன், முழுமையான நிறைவுடன் சேர்ந்த அமைதி. அதை வேண்டித் தான், அதைத் தேடித்தான் மனிதன் ஆரம்பத்தில் இருந்தே ஓடிக் கொண்டு இருக்கிறான். அதுவே மோட்ச நிலையில் கிட்டக் கூடியது. அதுவே மூலசக்தியாம் இறைவனிடம் உள்ளது. அந்த நிலைக்கு தியானம் ஒருவனை அழைத்துச் செல்லும் என்கிறது கீதை.

இந்த யோகம் யாருக்கு அமையாது என்பதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

அதிகமாகச் சாப்பிடுபனுக்கு யோகம் கிட்டாது. ஒரேயடியாகச் சாப்பிடாதவனுக்கும் யோகம் கிட்டாது. அதிகமாகத் தூங்குபவனுக்கும் இல்லை, அர்ஜுனா, அதிகமாக விழிப்பவனுக்கும் இல்லை.

”அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்கிறது ஒரு அருமையான பழமொழி. அமிர்தமே அளவை மீறும் போது நஞ்சு என்றால் மற்றவற்றைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாப்பாடு-பட்டினி, உறக்கம்-உறக்கம் இன்மை இவை எதிலுமே மிதமாக இருந்தால் தான் யோகம் சாத்தியமாகும் என்கிறது கீதை.

இதைத் தன் வாழ்க்கையில் உணர்ந்து தெளிந்த ஞானிகளில் மிக முக்கியமானவராக கௌதம புத்தரைச் சொல்லலாம். புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பழங்கால ஏடுகள் அவரது ஞானத் தேடல் வழிகளை விவரித்திருக்கின்றன. ஞானத்தைத் தேடிய சித்தார்த்தன் எதை எல்லாம் அக்காலத்தில் உயர்வாகவும், சிறந்ததாகவும் சொல்லி இருந்தார்களோ அதை எல்லாம் முழுமையாக முயன்று பார்த்திருக்கிறார். மாதக் கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார். உடலை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், உடல் பற்றிய பிரக்ஞை ஞானத்திற்கு எதிரானது என்ற சித்தாந்தத்தில் உறுதியாக பல வருடங்கள் இருந்து பார்த்திருக்கிறார். அவரது ஞானத் தேடல் முயற்சிகளின் போது ஒருசில சாதகர்களும் அவருடன் சேர்ந்து எல்லா வழிகளையும் பரிட்சை செய்து பார்த்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இதில் எல்லாம் ஞானம் கிட்டாது என்பதைப் புரிந்து தெளிந்தார். முழுப்பட்டினி கிடத்தல், உடலை வருத்திக் கொள்ளல் ஆகியவற்றை அவர் கை விட்ட போது அவருடன் இருந்த சாதகர்களுக்கு அவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது. கடுமையான முயற்சிகளைக் கைவிடுவதன் மூலமாக அவர் சுகவாழ்க்கைக்குத் திரும்புவதாக அவரை அவர்கள் குற்றம் சாட்டினர். அவரிடம் இருந்து விலகிப் போயினர்.

ஆனால் மிதமான அளவான வாழ்க்கைக்குத் திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் நினைத்தது போல தன் ஞானத் தேடலில் உறுதியைக் குறைத்துக் கொண்டு விடவில்லை. உள் நோக்கிக் குவிந்தன அவரது கவனமும், முயற்சிகளும், பயிற்சிகளும். சித்தார்த்தன் புத்தராக முடிந்தது. பிற்காலத்தில் அவரை விட்டு விலகிய அந்த சாதகர்களும் அவரது சீடர்களாக மாறினார்கள்.

புத்தர் உணர்ந்த உண்மையைத் தான் முன்பே ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொல்லி இருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டே இருப்பவனுக்கும் சரி, சாப்பாட்டையே மறுப்பவனுக்கும் சரி சாப்பாடு பற்றிய எண்ணம் பிரதானமாகிறது. தூங்கிக் கொண்டே இருப்பவனுக்கும் சரி, தூக்கத்தை மறுப்பவனுக்கும் சரி தூக்கம் பற்றிய எண்ணம் மிக முக்கியமாகிறது. எப்போது தூக்கம் அல்லது சாப்பாடு போன்ற விஷயங்கள் பிரதானம் ஆகின்றனவோ அப்போது யோகம் அல்லது ஞானம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது அல்லவா? பின் எப்படி யோகம் கைகூடும்?

பாதை நீளும்....

- என்.கணேசன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:45 am

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

அடுத்ததாக தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது கலப்படமில்லாத சத்தியமுமாகும். அவர் சொல்கிறார்:

தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர ஆசைப்படுகிறார்கள். கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். நான் பலவீனமானவன், சக்தியற்றவன், என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக் கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. அது தளிராகி, செடியாகி, மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும். கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி. அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும் நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:46 am

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து, அதன் படி அவனால் நடக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன் இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த இடத்தில் கூட நிற்க முடியாமல் தன் முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை. சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச் சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான். தவறுகளுக்காகத் தண்டிக்கப் படுக்கப்படுவதில்லை”. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது. அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும் மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை.

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப் பயணிப்பதில்லை. தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக் கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான். அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை வெளியே தேட வேண்டியதில்லை. புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. எனவே லௌகீகம் ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு உலகமே சரியாகி விடும்.

சரி-தவறு, நல்லது-கெட்டது தெரிந்தும் மனிதன் நல்வழிப்பாதையில் செல்லாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. உடலில் கட்டுப்பாடு இல்லை, மனதில் கட்டுப்பாடு இல்லை, சம நோக்கு இல்லை, மனத் திருப்தி இல்லை, பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை, ஆன்ம சிந்தனை இல்லை என்ற பல இல்லாமைகள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

மிக உயர்ந்த நிலையாக பரமாத்ம நிலை அல்லது யோக நிலை பற்றிச் சொல்லும் ஸ்ரீகிருஷ்ணர் அதைப் பெற்றிடும் வழியை அடுத்ததாகக் கூறும் போது இவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

தன்னை வென்றவனும், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், மானம்-அவமானம் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அமைதியாக இருப்பவன் பரமாத்ம நிலையைப் பெற்றிடுவான்.

ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் மனத்திருப்தி அடைந்தவனும் எதற்கும் அசைந்து கொடுக்காதவனும் புலன்களை வென்றவனும், மண்-கல்-பொன் மூன்றையும் ஒரே விதமாக மதிப்பவனும் யோகி என கூறப்படுகிறான்.

யோகியானவன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும் உடைமைகளையும் கைவிட்டு தனிமையில் இருந்து கொண்டு இடைவிடாத ஆன்மசிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:47 am

சமநோக்கு பற்றி எல்லா இடங்களிலும் சலிக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் சொல்ல மிக முக்கிய காரணம் அது இல்லா விட்டால் எதையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது என்பது தான். சரியாகப் புரிந்து கொள்ளாத போது தவறாக நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பின் விளைவுகள் அதற்குத் தகுந்தவாறு தொடர நமக்கு நாமே துன்பம் விளைவித்துக் கொள்கிறோம்.

இதில் புதிதாக ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்தும் விஷயம், தனிமையில் ஆன்மிக சிந்தனை. ’இனிது இனிது ஏகாந்தமினிது’ என்ற ஔவையாரின் கூற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தனிமை என்பது இக்காலத்தில் ஒரு கொடுமையான விஷயமாகவே பலராலும் கருதப்படுகிறது. சிறிது நேரம் தனிமை கிடைத்தாலும் அது சகிக்க முடியாததாகி விடுகிறது. அந்த நேரத்தில் யாரிடமாவது போன் செய்து பேசினால் என்ன என்று தோன்றுகிறது. எங்காவது போகத் தோன்றுகிறது. இல்லா விட்டால் டிவியையாவது பார்த்துக் கொண்டு பொழுது போக்கத் தோன்றுகிறது.

ஆனால் பல நேரங்களில் ஆழமான உண்மைகளை உணர மனிதனுக்குத் தனிமை தேவைப்படுகிறது. வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் இருந்தும், உலகின் இடைவிடாத கருத்துத் திணிப்புகளில் இருந்தும் விலகித் தனியாக யோசிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்க்கை சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறதா, சொந்த வாழ்க்கை தான் வாழ்கிறோமா, இல்லை யாரோ எவரோ வகுத்த வாழ்க்கை வாழ்கிறோமா, இப்படியே போகும் வாழ்க்கை தான் நம் லட்சியமா, முடிவில் வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையான திருப்தியை உணர்வோமா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கும்.

யோசிக்கவே நேரமில்லாமல் போவது தான் தவறான வாழ்க்கை முறைகளுக்கு முக்கியமான காரணம். யோசித்தால் நம் வாழ்க்கையின் பல குறைபாடுகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும் என்பதால் பலரும் யோசிக்காமல் இருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் மருத்துவரிடம் போனால் வியாதியைக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார் என்று பயந்து கொண்டு அவரிடம் போகாமல் இருந்து விடும் முட்டாள்தனம் போலத் தான். அவரிடம் போனால் வியாதி கண்டுபிடிக்கப்பட்டு குணமடைய வாய்ப்பு உண்டு. போகாமலே இருந்து வியாதியை முற்ற வைத்துக் கொண்டு சீக்கிரமாகவே அழிந்து போவது முட்டாள்தனம் தானே!

எனவே தனிமையும் சிந்தனையும் எந்த நல்ல மாற்றத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் அத்தியாவசியம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல இடைவிடாத ஆன்ம சிந்தனை அனைவருக்கும் உடனடியாக முடியக்கூடியதல்ல என்ற போதும் ஆன்ம சிந்தனையே இல்லாமல் யாரும் உலக வாழ்வில் அமைதியை அடைந்து விட முடியாது என்பது நிச்சயம்.

அடுத்ததாக தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் விளக்க ஆரம்பிக்கிறார். பார்ப்போம்....

பாதை நீளும்...

என்.கணேசன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:49 am

இயக்குவது இறைவனா, ஈகோவா?

கர்மம் இன்னொரு விதத்திலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெற்ற ஞானம் உண்மையானது தானா என்று பரிட்சித்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் கர்மம் விளங்குகிறது. செயல் புரியும் போது போது தான் பெற்றிருப்பது ஞானமா இல்லை வெறும் பிரமையா என்று புரியும். ஆசிரமத்திற்கு சென்று தியானம் கற்றுக் கொண்டு அந்த அமைதியான சூழ்நிலையில் தங்கி இருக்கும் போது மனம் அமைதி அடையலாம். அதை வைத்து ஞானம் பெற்று விட்டதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும், நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல் போகிறதா என்பது புரியும்.

இமயமலையில் இயற்கையின் பேரமைதியில் தியானம் கைகூடுவது பெரிய விஷயமல்ல. அந்த தியானம் ஒரு குழந்தையின் அழுகுரலில் கலைந்து மனதில் எரிச்சல் கிளம்பினால் தியான மார்க்கத்தில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று அர்த்தம். சத்சங்கத்திலும், எதிர்ப்புகள் அற்ற சூழலிலும் மனம் அமைதியாக இருப்பது பெரிய விஷயமல்ல. கோபத்தோடு ஒருவன் வந்து திட்டினாலோ, சிறுமைப்படுத்தினாலோ மனம் கொதிக்க ஆரம்பித்தால் பெற்ற ஞானம் இன்னும் போதவில்லை என்று அர்த்தம். இது போல கர்மம் புரிகையில் தான், வெளியுலக வாழ்க்கையில் பங்கு கொள்ளும் போது தான், ஞானம் பரிட்சிக்கப்படுகிறது. அதில் குறைபாடு இருந்தால் அது சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே இந்த வகையிலும் ஞான மார்க்கத்திற்கு கர்மம் உதவுகின்றது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

”கர்மயோகத்தைக் கடைபிடித்து ஆத்மசுத்தியை அடைந்து மனத்தையும், மற்ற புலன்களையும் வெற்றி கொண்டு அனைத்து உயிர்களிலும் உள்ள ஆத்மாவைத் தன் ஆத்மாக உணர்கிறவன் கர்மங்களைச் செய்தாலும் அவைகளில் ஒட்டுவதில்லை.

உண்மையை உணர்ந்த யோகி பார்த்தாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், சாப்பிட்டாலும், நடந்தாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் புலன்கள் தங்களுக்குரிய விஷயங்களில் இருக்கின்றன என்பதையும், செயல்புரிவது தானல்ல என்பதையும் அறிவான்.”

கர்மயோகத்தினால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மையாகும் போது ஆத்ம ஞானம் சுலபமாகக் கைகூடும். புலன்கள் ராஜாங்கம் செய்யாமல் பார்த்துக் கொள்வது எளிதாகும். ”நான்” என்ற ஈகோ அழிந்து போகும். அதன் பின் அனைத்து உயிர்களிலும் தன்னிடம் உள்ள ஆத்மாவையே ஒருவனால் காண முடியும். இது தான் ஞானம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:50 am

இன்று “நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் அதிகமாகி விட்டார்கள். சிலர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் கிட்டத்தட்ட கடவுள் போலவே காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் கடவுள் தன்மை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அது தன்னிடம் மட்டும் உள்ள தனித்தன்மை என்று நினைப்பது அஞ்ஞானமே. “நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்பவர்களில் 99% பேர் அந்த இரு சொற்களில் கடவுளைக் காட்டிலும் “நானி’ற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அஞ்ஞானிகளே. தன்னிடம் உள்ள கடவுளை அடுத்தவனிடம் காண முடியாத அஞ்ஞானக் குருடர்களே. சாதாரண மனிதர்களிடம் உள்ள ஈகோவை விட, அறியாமையை விட இவர்களின் ஈகோவும், அறியாமையும் பல மடங்கானவை என்றே சொல்ல வேண்டும்.

உண்மையான கர்மயோகி ஞானத்தையும் இயல்பாகவே பெற்று விடுவதால் அவன் செய்யும் செயல்களில் “நான்” என்ற அகந்தை இருப்பதில்லை. செயல்கள் செய்யும் போது அதைத் தான் செய்வதாக நினைப்பதில்லை. செயல்களில் “நான்” பின்னிப் பிணைந்திருக்காததால் அதன் விளைவுகளாலும் அவன் அலைக்கழிக்கப்படுவதில்லை. எல்லாம் ”அவன் செயல்” என்று வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜமாகவே உணர்ந்து அமைதியாக அவனால் வாழ முடிகிறது.

கனவில் வரும் நிகழ்வுகள் பாதிப்பது விழிப்படைந்தவுடன் நின்று விடுகின்றது. அதே போல அறியாமை உறக்கத்திலிருந்து விழிப்படைந்த நிலையில் உள்ளவனை அவன் பங்கு பெறும் உலகவாழ்க்கை பாதிப்பது நின்று விடுகிறது.

கர்மயோகத்தின் சிறப்பைச் சொல்லி சலிக்காத ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார்.

”யார் தனது கர்மங்களை எல்லாம் பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்து, பற்றின்றி செயல் புரிகிறானோ அவன் தாமரை இலையிலுள்ள தண்ணீர் போல பாவத்தால் களங்கப்படுவதில்லை.

சரீரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், புலன்களாலும், பற்றுதலில்லாமல் ஆத்ம சுத்திக்காகவே யோகிகள் கர்மத்தை மேற்கொள்கிறார்கள்.

கர்மயோகி கர்மபலனைத் துறந்து நிலையான சாந்தியை அடைகிறான். அப்படி இல்லாதவன் ஆசையால் தூண்டப்பட்டு பலனில் பற்று கொண்டு கர்மங்களால் கட்டுப்படுகிறான்.”

ஒரு நீர்நிலையில் உள்ள நீரின் அளவு எந்த அளவில் இருந்தாலும் கூட அந்த நீரால் தாமரை இலையை ஈரப்படுத்தி விட முடிவதில்லை. தண்ணீரிலேயே இருந்தாலும் அதில் பாதிக்கப்படாமல் இருக்கும் தாமரை இலை போல உலக வாழ்க்கையிலேயே இருந்தாலும் கூட கர்மயோகி பாதிக்கப்படுவதில்லை. காரணம் அவன் எந்த செயலையும் தன் தனிப்பட்ட லாப நஷ்டக் கணக்கை வைத்துக் கொண்டு செய்வதில்லை. செய்பவன் இறைவன், தான் ஒரு கருவி மாத்திரமே என்ற எண்ணத்தில் அத்தனையையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பற்றில்லாமல் செயல்படுகிறான்.

உடல், மனம், அறிவு, புலன்கள் – இவை எல்லாமே சும்மா இருக்க முடியாதவை. ஏதாவது வகையில் செயல்படத் துடிப்பவை. எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்து அதற்கான செயல்களாக அவை இருக்கும்படி பார்த்துக் கொள்பவன் தான் கர்மயோகி. அப்படி செயல்படும் போது செய்கின்ற எல்லாமே இறைவன் ஏற்படுத்தித் தந்தவை, செய்பவன் இறைவனே, விளைவுகள் இறைவனின் திருவுள்ளத்தின் படியே ஏற்படுகின்றன என்கிற மனப்பக்குவம் வந்து விடுகிறது. சந்தோஷப்படவோ, துக்கப்படவோ “நான்” என்ற ஈகோவிற்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. அதனால் தான் அவன் நிலையான சாந்தியை அடைகிறான்.

கர்ம யோகம் பிடிபடவில்லையானால், ஒருவன் செயல்களில் “நான்” என்ற ஈகோ புகுந்து விட்டால் அதனுடன் விருப்பு, வெறுப்பு முதலான அனைத்து இரட்டை நிலைகளும் புகுந்து விடுகின்றன. அலைக்கழித்தல் ஆரம்பமாகி விடுகின்றது. நினைத்தபடி நடக்கிற போது கர்வத்தோடு கூடிய ஆர்ப்பரிப்பு, எதிர்மாறாக நடக்கும் போது துக்கத்தோடு கூடிய அழுகை என்று மாறி மாறி மனிதன் அலைக்கழிக்கப்பட ஆரம்பிக்கிறான். விளைவுகளால் அவன் கட்டுப்பட நேரிடுகிறது. ஒரு கணமும் நிம்மதியாக இருக்க அவனை அந்த “நான்” அனுமதிப்பதில்லை. சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போல ஆசையிலிருந்து அழிவு வரை மனிதன் பெருவெள்ளத்தில் சிக்கிய துரும்பாக பயணிக்க நேர்ந்து விடுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 11:52 am

”நான்” என்ற அகந்தைக்கு எல்லாமே அறிந்தது போலவும், எல்லாமே தன்னால் முடியும் என்பது போலவும், எல்லாவற்றிற்கும் தன்னிடம் பதில் இருப்பது போலவும் அபிப்பிராயம் இருக்கும். எதுவும் எப்படி நடக்க வேண்டும் என்ற முடிவான அபிப்பிராயமும் இருக்கும். அதனாலேயே அதன் செயல்பாட்டில் இறைவனைக் கூட அனுமதிக்க அதனால் முடிவதில்லை. முழுவதுமாக அந்த நானின் கட்டுப்பாட்டில் நடக்கும் செயல்கள் எத்தனை தான் துக்கத்தைக் கொடுக்கும் விதமாக அமைந்தாலும் அதனால் விலக முடிவதில்லை. இந்த விலக முடியாத தன்மையிலேயே அத்தனை பிரச்சினைகளும் இருக்கிறது என்பதை அது உணர்வதில்லை.

மெத்தப்படித்த ஒரு பண்டிதர் ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பண்டிதர் தான் அறிந்ததையெல்லாம் கர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். உலகில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது. எது எது எப்படிச் செய்ய வேண்டும், எப்படி நடைபெற வேண்டும் என்று எல்லாம் பல மேற்கோள்கள் காட்டி ஞானிக்கு விளக்கினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஞானி சொன்னார். “நீங்கள் பிறப்பதற்கு முன் இறைவன் எப்படி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது”

பாதை நீளும்.....

- என்.கணேசன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 07, 2013 3:21 pm

துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும், உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான, அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது.

தியானம் செய்து பலன் பெறுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by முரளிராஜா Sun Jun 09, 2013 11:53 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கீதை காட்டும் பாதை  Empty Re: கீதை காட்டும் பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum