தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கபாடபுரம் (சரித்திர நாவல்)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 2:32 pm

First topic message reminder :


தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் : 

கபாடபுரம் (சரித்திர நாவல்)





    கதை முகம்



    இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே 'கதை முகம்' என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். 'முகஞ் செய்தல்' - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசியமென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறுபுறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்த்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலைநகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.பாண்டியர்களின் பொன் மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும், கபாடபுரத்தைப் பற்றிய ஓர் இலக்கிய அநுமான ஓவியம் என் மனதில் வரையப் பெற்று முற்றுப் பெற சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோநகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.முத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து - இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண்தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை, இவன் காலத்தில் அற்புதமாக வளர்ந்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின் பெயர் பெற்ற வெண்முத்துக்கள் பதித்த பல அழகிய இரதங்கள் இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது. வெண்முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் 'வெண்தேர்ச் செழியன்' என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம் என்ற நகரைப் பொருத்தமான இடத்தில் உருவாக்கிய பெருமையும் தேர்ப்படையை வளர்த்த பெருமையும் வெண்தேர்ச் செழியனையே சேரும். இவ்வரசன் கபாடபுரத்தில் அமைத்த தமிழ்ச் சங்கமாகிய இடைச் சங்கத்தில் ஐம்பத்தொன்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர். நூலாராய்ந்தனர். கவியரங்கேறினர்.வெண்தேர்ச் செழியன் அழகிய பொருநை நதி நகரைத் தழுவினாற் போல வந்து கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இந்த நகர் மிகப் பொலிவாக அமையும்படி உருவாக்கியிருந்தான். இன்றைய ஹாங்காங், சிங்கப்பூர், பம்பாய், கொச்சி போன்ற கடற்கரை நகரங்களை விடப் பெரியதும் கம்பீரமானதுமான கபாடபுரத்தில் முத்துக் குளித்தலும் இரத்தினம் முதலிய மணிகளை எடுத்துப் பட்டை தீட்டி உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தலும் நிகழ்ந்து வாணிகத்தைப் பெருக்கின. ஹாங்காங்கையோ, சிங்கப்பூரையோ, பம்பாயையோ, மனக்கண்ணில் நினைத்துக் கொண்டு அவற்றை விடப் பெரியதும், பொலிவு நிறைந்ததும் ஆனதோர் சரித்திர காலப் பெருநகரைக் கற்பனை செய்ய முயலுங்கள்! உங்கள் கற்பனை மனக் கண்ணில் வெற்றிகரமாக உருவானால் அந்தப் பெரிய கற்பனை தான் அன்று கபாடபுரமாயிருந்தது. அத்தகைய பெருமை வாய்ந்த கபாடபுரத்தில் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுக்கும் இரத்தினாகரங்களில் (இரத்தினச் சுரங்கம்) பல நாட்டினர் வந்து உழைத்தனர். எக்காலமும் ஆண்களும், பெண்களுமாக அந்த இரத்தினாகரங்களைப் பார்க்க வருவோர் கூட்டம் மிகுந்திருக்கும். முத்துக்குளிக்கும் துறைகளிலும் அதே கூட்டமிருக்கும்.கூடை கூடையாகப் பட்டை தீட்ட அள்ளிக் கொண்டு போகப்படும் இரத்தினக் கற்களைப் பார்ப்போர் மனம் ஆசைப்படும் - தன் நாட்டில் விளைபவை அவை என்று பெருமையும்படும். கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டுக் கப்பல்கள் வருவதும் போவதுமாக எப்போதும் பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச் சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர். இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது. இந்தக் கதை தொடங்கும் காலத்தில் அநாகுல பாண்டியனின் ஒரே மகனும் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து இளவரசனும், வெண்தேர்ச் செழியனின் பேரனுமாகிய சாரகுமாரன் மாறோக மண்டலத்துக் கொற்கையிலும் பூழியிலும் மணலூரிலுமாகத் தமிழ்ப் புலவர்களிடம் சில ஆண்டுகள் குருகுல வாசம் செய்துவிட்டு நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரத்துக்குத் திரும்புகிறான்.அந்த ஒரு நன்னாளில் இங்கே அவனைச் சந்திக்கிறோம் நாம். ஆண்டுதோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மாமன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டுதோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக - அவர் கண்காணவே இன்னும் சிறப்பாக - இந்த நகர்மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இதுதான். இனி வாருங்கள் கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.---------- 



Last edited by முழுமுதலோன் on Tue Feb 04, 2014 2:34 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:08 pm

25. மீண்டும் கபாடம் நோக்கி


தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள். சில இடங்களில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். சில தீவுகளில் சாதுரியமாகத் தங்களை யாரென்று இனங்காட்டிக் கொள்ளாமலே தப்பிக் கரைசேர வேண்டியிருந்தது. இன்னும் சில தீவுகளில் ஒரு பற்றுமற்ற துறவிகளைப் போல நடிக்க வேண்டியிருந்தது. இப்படிப் பல துறையான அனுபவச் செல்வங்களைப் பெற்று முடிந்த மனநிறைவோடு திரும்பிய போது இளையபாண்டியனும், முடிநாகனும், கப்பல் ஊழியர்களும் கபாடபுரத்தை விரைந்து சென்று காணும் ஆர்வமும், மனவேகமும், பிரிவுணர்ச்சியும் உடையவர்களாயிருந்தனர்.

எனவே திரும்பும் காலையில் எந்தத் தீவிலும், அதிகமாகத் தங்காமல் அவசியமான சில தீவுகளில் மட்டும் தங்கி விரைந்து ஊர் திரும்பத் தொடங்கியிருந்தனர். ஒரே மூச்சாகப் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கங்கே அவசியமான சில இடங்களில் நிறுத்தி உணவுப் பொருள் முதலிய தேவைகளை மரக்கலத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இல்லையானால் எங்கும் நிறுத்தாமலே பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். ஊழியர்கள் மிகவும் சோர்ந்து களைத்துப் போயிருந்தார்கள். எப்பொழுது கரைசேரப் போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் அவர்கள். முடிநாகனும் இளையபாண்டியனும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை மனம் விட்டுக் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஊழியர்களை ஒத்த அதே மனநிலையில் தான் இருந்தனர். தென் பாண்டி நாட்டுக் கரை நெருங்க நெருங்க அவர்கள் ஆர்வம் அதிகமாயிற்று. "யார் யாரிடம் எந்த எந்த அனுபவத்தை விவரித்துச் சொல்ல வேண்டும் என்பதில் இளையபாண்டியருக்கு அதிகக் கவனம் வேண்டும். பாட்டனாரிடம் இசையினால் கொடுந்தீவு மறவர்களின் மனத்தை மாற்றி வெற்றி கொண்ட நிகழ்ச்சியைக் கூறக்கூடாது. எயினர் தீவின் கலஞ்செய் நீர்க்களத்தின் நுணுக்கங்களை அறிய மேற்கொண்ட இராஜதந்திர நிகழ்ச்சிகளைப் பெரியபாண்டியரிடம் கூறினால் நாம் அவர்களை இசையால் மயக்கியது கோழைத்தனம் என்று கருதுவார் அவர். அதனால் தான் கவனமாயிருக்க வேண்டும் என்றேன்" என்றான் முடிநாகன். இளையபாண்டியனும் அவன் கூற்றை மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.

பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போலிருந்த சிறுதுறைமுகத்தை நெருங்கி மரக்கலம் நங்கூரம் பாய்ச்சப்படுகிற நிலையை அடைந்தபோது சொந்த மண்ணில் இறங்கப் போகிறோம் என்ற ஆர்வம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துறையில் இருந்தவர்களும், துறை ஊழியர்களும் ஆர்வத்தோடு இளையபாண்டியரின் மரக்கலத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். செய்தியை அரணமனையிலுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒருவன் அரண்மனைக்கு விரைந்தான்.

துறைமுகம் எங்கும் இளையபாண்டியர் திரும்பி வந்து விட்ட செய்தி ஒரு பரபரப்பையே உண்டாக்கியிருந்தது. துறையிலிருந்த வீரர்கள் ஓடோடிச் சென்று இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குச் செல்வதற்காக இரண்டு குதிரைகளை ஆயத்தம் செய்து கொண்டு வந்து நிறுத்தினர். அரண்மனை வாயிலில் தாய் திலோத்தமை இளையபாண்டியனுக்கு ஆரத்தி சுற்றித் திலகமிட்டு வரவேற்றாள். முதியபாண்டியர் ஆர்வத்தோடு அவனைத் தழுவிக் கொண்டு சில விநாடிகள் தன் பிடியிலிருந்து விடவே இல்லை. தந்தை அநாகுலனுக்கோ, தாய் திலோத்தமைக்கோ, மகனிடம் அளவளாவிப் பேச நேரமே அளிக்காமல் முதிய பாண்டியரே அவனைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விட்டார். முடிநாகனும் உடன் சென்றிருந்தான். முதிய பாண்டியருடைய மந்திரக்கிருகத்தில் சிகண்டியாசிரியரும், அவிநயனாரும் கூட இருந்தனர். சிகண்டியாசிரியரைப் பார்த்தவுடனே அந்தக் கொடுந்தீவு அனுபவத்தைக் கூறுவதற்கு நா முந்தியது! ஆனால் பாட்டனாரும் உடனிருப்பதை எண்ணி அந்த உணர்வை அடக்கிக் கொண்டான் இளையபாண்டியன். முதிய பாண்டியருடைய வினாக்களுக்கும், குறுக்கு வினாக்களுக்கும் தடுமாறாமல் மறுமொழி கூறி அவருடைய மனத்திருப்தியைச் சம்பாதிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. நல்ல வேளையாக முடிநாகனும் உடனிருந்தது ஓரளவுக்கு உதவியாக இருந்தது.

"எந்தத் தீவிலாவது குறிப்பாகத் தென்பாண்டி நாட்டின் மேலும், கபாடபுரத்தின் மேலும் முறுகிய பகை இருக்கிறதா?"

"பகை என்பதையே வேறு விதமாகவும் சொல்லலாம். நட்பும், விருப்பமும் இல்லை என்பதே பகையின் அடையாளம்தான். அந்தத் தீவிலுள்ளவர்கள் அவரவர்கள் தலைவனையே தங்கள் கடவுளாக வீர வணக்கம் புரிகிறார்கள். ஆடகத் தீவில் எங்களைத் துறையிறங்கவே விடாமல் மறுத்துவிட்டார்கள். எயினர் தீவில் கலங்கட்டும் தளத்தைக் காண்பித்து முடித்தபின் எங்கள் மேல் கடும் சந்தேகமுற்றுப் பல சோதனைகள் வைத்தார்கள். அவர்களை மீறித் தப்பி மேலே செல்ல நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது."

"நமது கடற்படையை வலிமையுடையதாக்கி எப்போதாவது இந்தத் தென்பழந்தீவுகளை எல்லாம் கைப்பற்றி அடக்கிப் பாண்டி நாட்டினோடு சேர்க்க முயன்றால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? உன் கருத்து என்ன?" என்று முதியபாண்டியர் கேட்டபோது அதற்கு இளையபாண்டியன் மறுமொழி கூறத் தயங்கி இருந்தான். ஆனால் முடிநாகன் உடனே முன் வந்து, "முதியபாண்டியர் திட்டமிட்டு யோசனை கூறிச் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று உறுதியான குரலில் கூறினான். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முதியபாண்டியர் விடை கொடுத்தார்.

உடனே சிகண்டியாசிரியர்பால் சென்றான் சாரகுமாரன். சிகண்டியாசிரியரிடம் கொடுந்தீவில் தனக்கு ஏற்பட்ட இசை அனுபவத்தை அவன் கூறியபோது அவர் வியந்தார். இசையின் விந்தைகளில் இது ஒரு புதிய சாதனை என்று கூறி அங்கு நிகழ்ந்ததைப் பற்றி விவரமாகக் கூறச் செய்து மீண்டும் கேட்டார். கேட்டவர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். ஏதோ பெரிய காரியத்துக்கான சிந்தனை அவர் மனத்தில் உருவாகிறது என்பதை முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

"இசைத்துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி செய்ய இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம்! உன் வாழ்விலும் இதனால் ஒரு புதிய பெரும்பயன் விளையப் போகிறது பார்" என்று சிறிது நேரத்தில் வியந்து கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனுக்கு அதைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

"மந்திரம் என்று அந்தக் கொடுந்தீவு மறவன் உன்னுடைய இசையைப் புகழ்ந்தது ஒருநாளும் வீண்போகாது பார்!" என்று மேலும் சிகண்டியாசிரியர் உற்சாகமாகக் கூறியபோது இளையபாண்டியனுக்கு மறுபடி மெய்சிலிர்த்தது. தன் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறது என்பது போல் தனக்குத்தானே ஓர் உள்ளுணர்வு அவனுள் விகசித்து மலர்ந்தது. அந்த உணர்வு ஆத்மபூர்வமானதாகவும் இருந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:09 pm

26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி


சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக் குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் நுணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.

அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளூறக் கலைவீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நவீன கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்து விட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச் செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.

இசைக் கலையின் மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக் கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக் கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவிர்த்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கனிகிறது. மனிதன் இன்னொன்றின் மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம் தான் இசையோ என்னவோ?

பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் - முடிநாகனின் துணையும் கூட இல்லாமல் - உலாவச் சென்று வருவது போல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.

இருள் பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஓலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும் மனத்திற்குள் ஓடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப் பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தன்னிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவது கூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.

புன்னை மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பது போன்றதொரு ஒலியை எழுப்பி ஓய்வதும் செவிக்குச் சுகமானதாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவி வந்து அவன் செவிகளில் எட்டலாயிற்று 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா?' என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது. அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த நுணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே இருந்தது.

அருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல் வரும் வழியிலே ஓடவேண்டும் போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னை மரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்க முடியும் என்பதை இன்றுதான் அவனால் உணர முடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனித்து பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு.

தான் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு வைகறையில் இதே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளைச் சந்தித்த போதும் அவள் இந்த நெய்தற் பண்ணையே பாடிக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் அவன். அதே நெய்தற்பண் இப்போது இன்னும் நன்றாக கனிந்திருந்தது. சோகம் இசையாக வரும்போது இன்பத்தையல்லவா கொடுக்கிறதென்ற விந்தையான சிந்தனையில் ஈடுபட்டான் அவன். சிறிது நாழிகையில் அவளுடைய பாட்டு நிறைந்தது. நிறைந்த பின்பும் அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும் விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டது போல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. 'சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.

அவ்வளவில் தலை நிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.

"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே? அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ?" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.

அவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மௌனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்.

"சிலருடைய குரலுக்குச் சோகமே அழகாக இருக்கிறது..."

"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால் தானோ என்னவோ?" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.

"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள்! எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டார். உன்னிடம் விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் உன் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர் பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்..."

"பிறரைப் பயப்பட வைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

"நீ கூறுவது தவறு! நான் யாரையும் பயப்பட வைக்கிறவனில்லை..."

"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்பட வைக்கிறவர்கள் தாமே?"

"சந்தர்ப்பம் அப்படி நேர்ந்துவிட்டது! அது என் தவறில்லை" என்று கூறிய இளையபாண்டியன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவளை நினைவு கூர்ந்ததையும், பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.

"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்பட வேண்டுமென்று என் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.

"அதற்குள் எவ்வளவோ நடக்கும்" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.

அரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.

சிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.

"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத் திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை நானே வரைவதாக இருக்கிறேன். அந்த மாபெரும் இசையிலக்கணத்தை இங்கேயே கோ நகரில் அரங்கேற்றவும் முடிவு செய்துள்ளேன்" என்று மனத்தில் ஏற்பட்ட புதுமைக் கிளர்ச்சியோடு அவனுக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:10 pm

27. பெரியபாண்டியரின் சோதனை


கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை. மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால் முன் தினம் சென்றது போல் ஆசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு அவனால் புரவியில் செல்ல முடியவில்லை.

எனவே அரண்மனை இரதம் ஒன்றில் ஆசிரியரை அழைத்துச் சென்றிருந்தான் அவன். விடிந்ததும் அரசக்கிருகத்து இரதங்களைச் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வெண்தேர்ச்செழியர் ஓர் இரதம் குறைவதைக் கண்டு முடிநாகனிடம் வினாவினார். முடிநாகனும், இளையபாண்டியனும், சிகண்டியாசிரியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்கு இரதத்தில் சென்றிருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கும்படி ஆயிற்று. தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் ஒரு பாண்மகளின் இசைக்கூத்தை இளையபாண்டியன் இரசித்து வியந்ததை மாறுவேடத்தில் சென்று கண்டிருந்த பெரியபாண்டியர் அதனால் சினமுற்றிருந்தார். இன்று சிகண்டியாசிரியரும் இளையபாண்டியனோடு சென்றிருப்பதை அறிந்து அவருடைய ஐயப்பாடு அதிகமாயிற்று.

"இவ்வைகறை வேளையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு எதற்காகச் சென்றான் சாரகுமாரன்?" என்று அவர் கடுகடுப்போடு வினாவியபோது முடிநாகன் தயங்கித் தயங்கி மறுமொழி கூறினான். ஆயினும் பெரியபாண்டியர் சந்தேகத்தோடுதான் திரும்பினார்.

"சிகண்டியாசிரியர் திரும்பியதும் அவரை நான் காணவேண்டும் என்று சொல்" எனக் கூறிவிட்டுத்தான் திரும்பினார் அவர். என்ன நேருமோ என்ற பயத்தில் முடிநாகனுக்கு நெஞ்சு படபடத்தது. இளையபாண்டியரையே கூப்பிட்டு விசாரணை செய்தாலும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வார். சிகண்டியாசிரியரைக் கூப்பிட்டு விசாரித்தால் அவர் பெரியபாண்டியரிடம் பொய் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்லாவிட்டால் இளையபாண்டியரின் மேல் பாட்டனாருக்குத் தாங்க முடியாத சினம் மூளுமே என்று எண்ணி அஞ்சினான் முடிநாகன். இளையபாண்டியர் அதைப் பெரியவரிடம் தான் சொன்னதற்காகத் தன்மேற் சினந்து கொள்வாரோ என்ற பயம் கூட முடிநாகனுக்கு இருந்தது. தேரில் கடற்கரைக்குச் சென்றிருந்த சிகண்டியாரும், சாரகுமாரனும் திரும்பி வருகிறவரையில் அரசகிருகத்து தேர்கள் நிறுத்தப்படுகிற இடத்திலேயே அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் முடிநாகன்.

நன்றாக விடிந்து சில நாழிகைகள் கழிந்த பின்பே அவர்கள் சென்றிருந்த தேர் திரும்பி வந்தது. உடனே முடிநாகன் இளையபாண்டியனை மட்டும் ஒரு கணம் தனியே அழைத்துப் பெரியவர் தேர்களைப் பார்க்க வந்திருந்ததையும், நடந்த பிற விவரங்களையும் கூறினான். இளையபாண்டியனால் முடிநாகனிடம் கோபித்துக் கொள்ள முடியவில்லை. சிகண்டியாசிரியரிடம் பெரியவர் வினாவினால் அவருக்குச் சந்தேகம் வராதபடி மறுமொழி கூறுமாறு சொல்லிவிட முடிவு செய்தான் அவன். தேரை அரசகிருகத்தின் தேர்ச்சாலையில் விட்டு விட்டு இருவரும் அரண்மனைக்குள்ளே செல்ல இருந்த நிலையில் முடிநாகன் "பெரியபாண்டியர் தங்களைக் கண்டு பேச விரும்பினார்" என்று சிகண்டியாசிரியரிடம் தெரிவித்தான். சிகண்டியாசிரியரும் அதைக் கேட்டுத் தாமே பெரியபாண்டியரைக் காண்பதாக அவனிடம் கூறிச் சென்றார். அப்படிச் செல்லும்போது குறிப்பறிந்த சாரகுமாரன் அவருடன் செல்லவில்லை. சிகண்டியாசிரியரைக் கண்ணுக்கினியாளின் தெய்வீக இசையைக் கேட்கச் செய்துவிட்ட பெருமையில் இருந்தான் இளையபாண்டியன். பாட்டனாரிடம் சிகண்டியார் விபரீதமாக எதுவும் கூறிவிட முடியாது என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கையும் இருந்தது.

சிகண்டியார் பெரியபாண்டியரைச் சந்திக்கச் சென்ற போது பெரியபாண்டியர் எதற்காகவுமே சிறப்பான காரணத்திற்காக அவரைக் காண விரும்பியது போல் பேசாமல் பொதுவான பல செய்திகள் பற்றிப் பேசினார். இசை நூல்கள், இளையபாண்டியனின் இசைப் பயிற்சி, குருகுலவாசத்தை முடித்து அவனுக்கு அரசியல் அனுபவங்களை உணர்த்த, எல்லாவற்றையும் பற்றிக் கூறிக் கொண்டே வந்தவர் இறுதியில் இளையபாண்டியனும் அவரும் தேரில் போயிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுச் சிகண்டியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

"ஓ! அதுவா? நெய்தற் பண்ணைப் புதுப்புது நுணுக்கங்களுடன் பாடும் பாண்மகள் ஒருத்தி கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் இருப்பதாக அறிந்து காண்பதற்குச் சென்றோம். அந்தப் பாண்மகளின் குரல் இலக்கணங்களை மீறிய அழகுடையதாயிருந்தது. அந்தக் குரலுக்கே ஓர் இலக்கணத்தைப் படைக்கலாம் போல அத்தனை அழகுடையதாயிருந்தது" என்று வியந்தவாறே பெரியபாண்டியருக்கு மறுமொழி கூறினார் அவர்.

"உங்களுக்கு முன்பே தெரிந்த அவளைக் காண இளையபாண்டியனை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா? அல்லது அவளை முன்பே அறிந்த இளையபாண்டியன் அவளைக் காண உங்களை அழைத்துச் சென்றானா?"

இதற்குச் சில கணங்கள் மறுமொழி சொல்லத் தயங்கினார் சிகண்டியார்.

"சிறப்பான காரணம் எதற்காகவும் இதை வினவவில்லை சிகண்டியாசிரியரே! அறிவதற்காகவே வினாவுகிறேன்" என்று அவரை மேலும் தூண்டினார் பெரியவர். "இளைய பாண்டியர் முன்பே பலமுறை அந்த அபூர்வ இசையைக் கேட்டு என்னிடம் பெருமையாகக் கூறியதால் தான் நானும் சென்றேன். நான் படைத்துவரும் இசை நுணுக்க நூலுக்குப் பெரிதும் பயன்படும் அனுபவம் அது" என்று நிர்விகல்பமாக மறுமொழி கூறிவிட்டார் அவர்.

"அப்படியானால் நானும் அந்தப் பாண்மகளின் இசையைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாளை என்னை அழைத்துச் செல்வீரா?" - என்று உள்ளடக்கமான குரலில் சிகண்டியாரைக் கேட்டார் பெரியபாண்டியர்.

சிகண்டியார் தயங்கினார். "வேறொன்றுமில்லை! நல்ல இசையை நானும் பாராட்டலாமே என்றுதான்" என மேலும் வேண்டினார் பெரியவர்.

இசைபோன்ற நுண்கலைகளில் விருப்பமே அதிகமில்லாத பெரியபாண்டியர் திடுமென்று இப்படிக் கேட்டதில் ஏதோ விபரீதமிருப்பதாக அப்போதுதான் சிகண்டியாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தட்டிக் கழிக்க முயன்றார். பெரியபாண்டியரோ பிடிவாதமாக அந்தப் பாண்மகளைத் தானும் பார்த்தே தீரவேண்டுமென்றார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:11 pm

28. கலைமானும் அரிமாவும்


பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியாசிரியருடைய சொற்களால் தகர்க்க முடியவில்லை. கலை காரணமாக ஏற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதி மழுங்கியிருக்கவில்லை. 'நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன்' என்று பெரியபாண்டியர் கூறியதைச் சிகண்டியார் நம்பவில்லை. அவருடைய வேண்டுகோளில் இயற்கையான ஆர்வமோ, கனிவோ இல்லாததை அவர் முன்பே கூர்ந்து கவனித்து உணர்ந்துவிட்டார். அந்த வேண்டுகோளில் யாருமே விரும்பத் தக்கதல்லாத ஒரு கடுமையான உள்நோக்கம் இருப்பதுபோல் சிகண்டியாசிரியருக்குத் தோன்றியது. அதற்கு இணங்கவும் மனமின்றி அதை மறுக்கவும் இயலாதவராய்க் குழப்பமானதொரு மனநிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.

கண்ணுக்கினியாளைப் பற்றிப் பெரியபாண்டியரிடம் எதுவும் கூற நேர்ந்தால் அவருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி கூறுமாறு இளையபாண்டியன் தன்னிடம் வேண்டிக் கொண்டிருந்ததை இப்போது நினைவு கூர்ந்தார் சிகண்டியாசிரியர். சிறிய காரணத்துக்காகவோ, பெரிய காரணத்துக்காகவோ எதற்குமே அவர் பொய் சொல்லிப் பழகியதில்லை. பொய் சொல்லக் கூடாதென்ற நோன்பை அழித்துக் கொள்ளக் காரணம் சிறிதாயிருந்தால் என்ன? பெரியதாயிருந்தால் என்ன? அது அவரால் முடியவில்லை. பெரியபாண்டியரைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துப் போக அவர் இணங்கிவிட்டார். 'அப்படித் தம்மை அங்கு அழைத்துப் போகும் செய்தியை இளையபாண்டியனுக்குத் தெரிவிக்கலாகாது' என்றும் சாமர்த்தியமாகச் சிகண்டியாசிரியரிடம் வாக்கும் வாங்கிக் கொண்டுவிட்டார் பெரியவர். கலை உள்ளத்தின் கனிவையும், மென்மையையும் அரசியல் காரணங்களுக்காக அவற்றை அணுகுகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாமற் போகிறதே என்று உள்ளூற வருந்துவதைத் தவிரச் சிகண்டியாசிரியரால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை. இளையபாண்டியன் தன்னைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துச் சென்ற அதே தினத்தின் மாலை வேளையில் பெரியவரைத் தான் அவளிடம் அழைத்துச் செல்ல வேண்டியவராக இருந்தார் சிகண்டியாசிரியர்.

காலையில் இளையபாண்டியனோடு கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்ற போதிருந்த அவ்வளவு உற்சாகம் மாலையில் வெண்தேர்ச் செழியரோடு சென்ற போது அவருக்கு இல்லை. கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற மனநிலையோடு இருந்தார் அவர். கண்ணுக்கினியாள் என்ற புள்ளிமானைக் காணப் பெரியபாண்டியர் என்ற சீற்றம் நிறைந்த முதிய சிங்கத்தை அழைத்துப் போவது போன்ற அவ்வளவு வேதனை அந்த இசைப்புலவருடைய உள்ளத்திலே நிறைந்திருந்தது. சிகண்டியாசிரியர் சந்தேகப்பட்டதற்கும் வேதனைப்பட்டதற்கும் ஏற்றாற்போலவே பெரியபாண்டியரும் அங்கு நடந்து கொண்டார். சிறிது நேரம் அவளுடைய இசையைக் கேட்பதுபோல நடித்த பெரியபாண்டியர் அவளிடம் வினாவிய வினாக்களும் விசாரித்த விசாரணைகளும் சிகண்டியாசிரியரைக் கலக்கத்திற்கு உள்ளாக்கின.

"இவ்வளவு நன்றாகப் பாடும் வல்லமை வாய்ந்த நீயும் உன் பெற்றோரும் ஏன் இந்தக் கபாடபுரத்திலேயே தங்கி விட்டீர்கள்? பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் ஊரூராகச் சென்று பாடிக்கொண்டிருப்பதல்லவா சிறந்த பாண்குடியினருக்கு அழகு?" என்று முதல் வினாவிலேயே அவள் மனத்தை ஆழம் பார்த்தார் பெரியபாண்டியர்.

"நகரணி மங்கல விழாவுக்காக இங்கு வந்தோம்! அப்படியே தங்கிவிட்டோம். வந்த கலைஞர்களை எல்லாம் காலவரையறையின்றி விருந்தினராக ஏற்று உபசரிக்கும் பண்புள்ள இந்தப் பாண்டிய நாட்டில் முதல் முதலாக நீங்கள் தான் இப்படி எங்களை வினாவுகிறீர்கள்! தங்கள் நாட்டிற்கு வந்த கலைஞர்கள் வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகாமல் ஏன் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள் என்று கவலைப்படும் முதல் மனிதரை நான் இன்று மாலையில் இப்போதுதான் இங்கே சந்திக்கிறேன்!" என்றாள் கண்ணுக்கினியாள்.

"நான் தவறாகக் கூறவில்லை பெண்ணே! சிறப்பாக வேறு காரணம் ஏதாவது இருந்தாலன்றிக் கலைஞர்கள் ஓரிடத்திலேயே இப்படித் தங்கமாட்டார்களே என்றுதான் வினாவினேன்..."

"இது வெறும் வினாவா? அல்லது கவலையா? என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் கேள்வி வினாவாக மட்டும் ஒலிப்பதுபோல எனக்குத் தோன்றாததுதான் காரணம். கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று கலைஞர்களே உணராத ஒன்றை வற்புறுத்துகிறீர்கள் நீங்கள்..."

"அப்படியில்லை. இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். கலையின் மேல் பிரியப்பட்டு மட்டுமே ஓரிடத்தில் தங்க முடியாது...?"

"எப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். இடத்தின் மேல் பிரியப்படுத்துவது தவிர மனிதர்கள் மேல் பிரியப்படத்தக்க அத்துணைச் சிறப்பான பண்புள்ள மனிதர்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் என்று காலை வரையில் நான் எண்ணியிருந்தேன். இப்போதோ என்னுடைய அந்த இரண்டாவது எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது."

"நீ மிகவும் சினமாகப் பேசுகிறாய் பெண்ணே! பேச்சில் எப்போதுமே நிதானம் வேண்டும். அதுவும் என்னைப் போன்ற முதியவர்களிடம் உரையாடும்போது இன்னும் அதிகமான நிதானம் வேண்டும்."

மறுமொழி கூறாமல் அவரை வெறுப்பவள் போல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். இந்தக் கேள்விகளை விரும்பாத சிகண்டியாசிரியர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். சிறிது தொலைவு விலகி நின்ற அவள் தந்தை, அருகில் வந்து பெரியபாண்டியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

"தொடர்ந்து ஓரிடத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கு மாறிமாறிச் சென்று கொண்டிருப்பதனால்தான் கலைஞர்களின் கலை வளர்ச்சியும் மெருகும் அடையும்" என்று மீண்டும் அவளுடைய தந்தையிடம் வாதிடத் தொடங்கினார் பெரியபாண்டியர்.

உடன் வந்திருந்த சிகண்டியாசிரியருக்கே வெறுப்பைத் தருவதாயிருந்தது அவர் பேச்சு. தானும், தன்னுடன் வந்தவரும் இன்னார் இன்னாரெனச் சிகண்டியாசிரியர் தெரிவிக்காததனால் புள்ளிமான் போன்ற அந்தப் பெண்ணுக்குப் பெரிய பாண்டியரிடம் பயமும் இல்லை, மதிப்பும் வரவில்லை. சினமே மேலெழுந்து பொங்கியது. காலையில் இளையபாண்டியன் சிகண்டியாசிரியரை மாறுவேடத்தில் அழைத்து வந்திருந்ததனால் இப்போது அவரை அவளுக்கு அடையாளமும் தெரியவில்லை. ஆனால் உடன் வந்திருந்த கிழச்சிங்கத்தை ஒத்த அந்த முதியவர் வினாவினாற் போன்ற வினாக்களையே தன்னிடம் வினவாமல் அமைதியாக இருந்ததோடல்லாமல் அந்த வினாக்களை ஓரளவு வெறுப்பதுபோன்ற முகபாவத்தையும் காண்பித்ததனால் சிகண்டியார் மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. பெரியபாண்டியர் மேலேயே சினம் மூண்டது. பெரியபாண்டியரோ தான் யாரென்று அவளுக்குக் குறிப்பாகப் புரியவைத்து அவளை மேலும் பயமுறுத்தவும், திகைக்க வைக்கவும் விரும்பினார்.

அரசகுடும்பத்தினர் மட்டுமே பாணர்களுக்குப் பரிசளிக்கும் பொற்பூக்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டு வந்திருந்த அவர் அந்த பொற்பூக்களில் ஒன்றை எடுத்து, "எவ்வாறாயினும் ஆகுக! உன் கலைத்திறனைப் போற்றி இவற்றை உனக்களிக்கிறேன்" என்று அவற்றை அவளிடம் நீட்டினார். ஆனால் அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை எள்ளி இகழ்வது போன்ற புன்னகையொன்று உடன் அவள் இதழ்களில் மின்னி மறைந்தது. "தங்களை மதியாதவர்களுடைய பரிசை ஏற்பது கலைஞர்களின் இயல்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?" என்று அவள் பதிலுக்குச் சீறிய போது பெரியவரின் முகத்தின் சினம் அதிகமாகியது. கடுமையும் மிகுதியாகி வளர்ந்தது.

"ஏதேது? உங்கள் சினத்தைப் பார்த்தால் எங்களை நாடுகடத்தவும் செய்வீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் அவள்.

"அவசியமென்று கருதினால் அதையும் செய்ய முடிந்தவன் தான் நான்" என்று கூறிவிட்டுப் "போகலாம்! புறப்படுங்கள்" என்று சிகண்டியாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பெரியவர். புறப்படுகிறபோது முறைக்காக ஒரு வார்த்தை கூட அவளிடமோ அவள் தந்தையிடமோ சொல்லிக் கொள்ளவில்லை. சிகண்டியார் மட்டும் சொல்லி விடைபெற்றுக் கொண்டார். இருவரும் அரண்மனையை நோக்கித் திரும்பினர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:12 pm

29. இசைநுணுக்க இலக்கணம்


கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்து கொண்டார். போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும் அவள் குடும்பத்தினரையும் நாடுகடத்தினால் கூட வியப்பதற்கில்லை என்று தோன்றியது. அதற்குள் தம் கலை இலட்சியமாகிய இசைநுணுக்க இலக்கண நூலை இயற்றி அரங்கேற்றி முடித்துவிடுவதில் கவனம் செலுத்த வேண்டியவராக இருந்தார் அவர். இளையபாண்டியனும், கண்ணுக்கினியாளும் தத்தம் குரலினிமையின் மூலம் விளைவித்துக் காட்டிய புதுமைகளையும், நுணுக்கங்களையும், நயங்களையும் கண்டபின் அவற்றை இலட்சியங்களாகக் கொண்டே இசைநுணுக்கத்தை இயற்றத் தொடங்கியிருந்தார் அவர். கலைத்துறையைப் பொறுத்தவரையில் ஓர் சுவையின் மேலான எல்லையைத் தொடுகிறவர்கள்தான் அதுவரை அந்தத் துறைக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும் மரபுகளையுமே வளர்த்துப் புதியதாக்கி விடுகிறார்கள்.

இப்படிப் புதிய இலட்சியங்கள் பிறந்துவிட்டபின்பே அவற்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு புதிய இலக்கணங்களும், மரபுகளும் பிறக்கின்றன. இலட்சியங்களைப் படைக்கிற படைப்பாளியின் சாதனை எல்லை என்கிற உயரத்தை அடையமுடியாமல் சில வேளைகளில் இலட்சணங்களை வரையறுத்துச் சொல்லுகிற இலக்கண ஆசிரியரின் கீழ் எல்லையிலேயே தளர்ந்து நின்றுவிடுவதும் உண்டு. அப்படித் தளர்ந்து நின்றுவிடுவதனால் அந்தக் கலையின் எதிர்காலத்துக்கு வளர்ந்துவரும் புதிய மரபுகள் சொல்லப்படாமலே போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடலாகாதே என்பதற்காகத்தான் சிகண்டியாசிரியர் இசை நுணுக்க இலக்கணத்தை விரைந்து இயற்றிக் கொண்டிருந்தார். அந்த இலக்கணத்தை அவர் இயற்றுகையில் பெரும்பான்மை நேரம் சாரகுமாரனும் அவருடன் கூடவே இருந்தான். பெரியபாண்டியரோடு தாம் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்த செய்தியைச் சிகண்டியாசிரியர் சாரகுமாரனிடம் கூறவில்லை. சாரகுமாரன் மட்டும் முடிநாகனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில காலை வேளைகளிலும், சில மாலை வேளைகளிலும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்தான். அப்படிச் சென்று கண்ணுக்கினியாளைச் சந்தித்த போதும் அவளிடம் ஆழமான மாறுதல் ஒன்றை உணர்ந்தான் அவன்.

சிரிப்பும், மகிழ்ச்சியும், கலகலப்பான உரையாடலும் அற்றுக் கவலை நிறைந்தவளாய்த் தென்பட்டாள் அவள். அந்த மாறுதலைப் புரிந்து கொள்ளவும் முடியாமல், வினாவித் தெரிந்து கொள்ளவும் இயலாமல் வேதனைப்பட்டான் சாரகுமாரன். கபாடபுரத்திலிருந்து தாங்கள் வேறு ஊருக்குப் புறப்படப் போவதைப் பற்றியே அவனைச் சந்திக்க நேரும் போதெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் அவள். சாரகுமாரனுக்கு இது புதுமையாக இருந்ததோடல்லாமல் மனவருத்தத்தை அளிப்பதாகவும் இருந்தது. மனத்திற்குள்ளேயே துயரப்பட்டான் அவன். சிகண்டியாசிரியர் பெரியபாண்டியரை அவளிடம் அழைத்துச் சென்றிருந்ததையும், அவர் அவளிடம் வினாவிய வினாக்களையும் கூறியிருந்தாரானால் சாரகுமாரனுக்கு அவளுடைய இந்த மாறுதலுக்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதையும் அவர் கூறாததால் ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது சாரகுமாரனுக்கு.

"கோ நகராகிய கபாடபுரத்தின் அரசவையில் பெரும் புலவர்கள் அனைவரையும் கூட்டிய அரங்கத்தில் இசை நுணுக்கத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் நான். பெரியபாண்டியரிடம் இதை எடுத்துக்கூறி அவருடைய இசைவைப் பெற வேண்டும்" என்று சாரகுமாரனிடம் விளக்கினார் சிகண்டியாசிரியர்.

"நாமிருவருமாகச் சென்று பாட்டனாரிடம் கூறினால் அவர் அவசியம் இணங்குவாரென்று நம்புகிறேன்" என்று சாரகுமாரன் கூறத்தொடங்கியதை மறுத்து, "நான் ஒருவனே சென்றால் பெரியபாண்டியர் ஒரு வேளை இந்த அரங்கேற்றத்திற்கு இணங்கினாலும் இணங்கலாம். இளையபாண்டியரும் உடன் வந்தாலோ பெரியவருக்கு உலகத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்துவிடும். மறுத்தாலும் மறுத்துவிடுவார்" என்றார் சிகண்டியாசிரியர். ஆசிரியரின் இந்தக் கருத்தில் இளையபாண்டியனுக்குச் சந்தேகம் எதுவும் உண்டாகவில்லை. அதனால் அவன் அவர் விருப்பப்படியே செய்ய இணங்கினான். ஆனால் ஒன்றை மட்டும் சிகண்டியாசிரியரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினான்.

"இசைநுணுக்கம் என்ற தங்கள் நூல் தோன்றக் காரணமாயிருந்தவளும் அந்த அரங்கேற்றம் நிகழ்கிற அன்று இந்த அரண்மனையில் வந்து இசைக்க வேண்டும் என்பது என் விருப்பம்" என்று சாரகுமாரன் ஒவ்வொருமுறை கூறும்போதும் சிகண்டியாசிரியர் உள்ளூர வருந்தினார். "கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பாண்மகள் வந்து பாட வேண்டும்" என்று வேண்டினால் பெரியபாண்டியர் இசைநுணுக்க நூலை அரங்கேற்றவே ஒப்புக் கொள்ளமாட்டாரென்று தோன்றியது. அதை இளையபாண்டியனிடமும் மனம் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார் அவர். சாரகுமாரனின் தந்தை அநாகுல பாண்டியனிடம் இந்த அரங்கேற்றத்தைப் பற்றி விவரித்துக் கூறலாம் என்றாலோ பெரியபாண்டியர் வெண்தேர்ச் செழியரின் விருப்பத்துக்கு மாறாக அநாகுலனும் ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான் என்பது சிகண்டியாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே பெரிய பாண்டியரையே தேடிச் சென்றார் அவர். பெரியபாண்டியர் சிகண்டியாசிரியரை வரவேற்ற விதமே இசையைப் பற்றியோ, கலைகளைப் பற்றியோ, கடற்கரைப் புன்னை மரத்தோட்டத்தில் தங்கியிருக்கும் பாண்மகளைப் பற்றியோ எதையும் என்னிடம் சொல்லிவிடாதே என்பதுபோல் இருந்தது.

"தென்பழந்தீவுகள் அனைத்தையும் ஒரு வலிமை வாய்ந்த கடற்படையை அனுப்பி வெற்றி கொண்டு நேராகக் கபாடபுரக் கோ நகரின் ஆட்சிக்குக் கீழே கொணர்ந்து பாண்டியர் வலிமையைப் பலப்படுத்திவிட எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஒரு வழி புலப்படவில்லை. தென்கடலில் தனித்தனியே சிதறுண்டு கிடக்கும் அந்தத் தீவுகளை ஓரிரு நாட்களில் வெற்றி கொள்வதும் சாத்தியமென்று தோன்றவில்லை. அதிக நாட்களும், அதிக முயற்சியும், அதிகப் பொறுமையும் அந்தக் காரியத்திற்குத் தேவைப்படும். அநாகுலனை அனுப்பலாமென்றாலோ, அவ்வளவு அதிக நாட்கள் அவன் கோ நகரத்தில் இல்லாமல் வெளியே தீவுகளுக்குப் போவது நல்லதல்ல. நானே போகலாமென்றாலோ என்னுடைய முதுமையும், தளர்ச்சியும் அதற்கு ஏற்றவையல்ல. இந்த நிலையில் இந்தப் படையெடுப்பிற்குத் தலைமையேற்கச் சாரகுமாரன் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை. முன்பே அதை மனத்திற் கொண்டுதான் அவனையும், முடிநாகனையும் தென்பழந்தீவுகளில் ஒருமுறை சுற்றிவருமாறு செய்தேன். ஆனால் அவனோ இன்னும் அரசியற் பொறுப்புக்களில் அக்கறையற்றவனாகத் தோன்றுகிறான்."

"ஓர் அரசன் போரற்ற அமைதிக் காலங்களில் மட்டுமே கலைகளின் இரசிகனாக இருக்கலாமே அன்றிப் போர்க்காலங்களில் கலைகளை மறக்கவும் தெரிய வேண்டும். இரசிகனாக இருப்பதற்கும் மேலாக அவனே கலைஞனாக இருப்பதோ, கவிஞனாகவே வளர விரும்புவதோ அவனைப் பெற்ற அரசகுடும்பத்துக்கு எவ்வளவிற்குப் பயன்படாமல் போகுமென்பதை உங்களைப் போன்ற புலவர்களால் ஒருபோதும் உணர முடிவதில்லை. ஆனால் என் போன்றவர்களோ ஒவ்வொரு விநாடியும் அதை மட்டுமே உணர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைகள் மனித இதயத்தை நெகிழச் செய்து நளினமாக்கிவிடுகின்றன. ஒரு மனம் அப்படி நெகிழ்ந்து நளினமாவதனால் அது ராஜதந்திர நினைவுகளுக்கோ, அரசியற் சூழ்ச்சிகளுக்கோ பயன்படாமல் போகிறது" என்று கவலை தோய்ந்த குரலில் பெரியபாண்டியர் தன்னிடம் வருத்தப்பட்ட போது, தான் வந்த காரியத்தை அவரிடம் கூறுவதற்கு ஏற்ற சமயம் அதுதானா இல்லையா என்பதைக் கணிக்க முடியாமல் தயங்கியபடியே பேசாமல் இருந்தார் சிகண்டியாசிரியர். பெரியபாண்டியரோ அவருடைய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் தொடர்ந்து குறைபடத் தொடங்கிவிட்டார்.

"மனம் அரசதந்திரத்திற்கு ஏற்றதாக வாய்க்காத காரணத்தினாலேயே அப்படிப்பட்ட அரசகுமாரர்களைப் பெற நேர்ந்த பல அரச குடும்பங்கள் பெருமையழிந்து மரபு கெட்டிருக்கின்றன. தென்பழந்தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின் அந்தத் தீவுகளை வென்று அடக்கி வலிமை மிக்கதொரு பாண்டியப் பேரரசை உருவாக்க வேண்டியதைப் பற்றித் தானாகவே என்னிடம் பேசவருவான் வருவானென்று சாரகுமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனோ காலையும், மாலையும், தேரிலும் புரவியிலுமாக மாற்றி மாற்றிக் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையிலேயே நீங்கள் வேறு இசையிலக்கணம் ஏதோ இயற்றிக் கொண்டிருக்கிறீர்களாம்..." என்று அவர் கூறிக்கொண்டே வந்தபோது அதுதான் சமயமென்று,

"ஆம்! அந்த இசையிலக்கண நூலைக் கபாடபுரத்துப் புலவர் பெருமக்கள் கூடிய பேரவையிலேயே அரங்கேற்றுவது பற்றிப் பேசத்தான் நான் இப்போது உங்களிடம் வந்தேன். விரைவில் அதை அரங்கேற்றி முடித்துவிட்டால் அப்புறம் இளையபாண்டியருடைய கவனத்தை அரசியற் காரியங்களில் திருப்புவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும். அதை அரங்கேற்றக் காலந்தாழ்த்திக் கொண்டே போனாலும் இளையபாண்டியருடைய கவனம் அந்த அரங்கேற்றத்தை எதிர்நோக்கியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க ஒரே வழி அந்த அரங்கேற்றத்தை உடன் ஏற்பாடு செய்து முடிப்பதுதான்! தங்கள் மனக்குறிப்பை அறிந்துதான் நானும் அதனை விரைந்து அரங்கேற்றி முடிக்க விரும்பினேன்". சமயோசிதமாக அவர் மனப்போக்கினை அறிந்து இப்படிப் பேச்சைத் திசை திருப்பினார் புலவர்.

"அரங்கேற்றம் முடிந்தபின்பும் சாரகுமாரன் கலை கலை என்று திரியத் தொடங்கினால் எனக்கு உங்கள் மேல்தான் கோபம் வரும்" என்று நிபந்தனையில் இறங்கினார் பெரியவர். ஒரு வழியாக அதற்கு ஏதோ தீர் திறன் கூறி அவரை அரங்கேற்றத்துக்கு இணங்கச் செய்து அடுத்த பௌர்ணமி மாலையில் இசைநுணுக்க நூலுக்கு அரங்கேற்ற நாள் குறித்தார் சிகண்டியாசிரியர்.

"இந்த நூல் அரங்கேறிய உடனே மறுபடியும் இன்னொரு இசையிலக்கணத்தை உடனே உருவாக்கி விடமாட்டீரே?" என்று பெரியபாண்டியர் குத்தலாகக் கேட்ட போது சிகண்டியாசிரியருக்கு உள்ளூறச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அடக்கமாகவும் நிதானமாகவும், "அப்படியெல்லாம் ஒன்றும் நேர்வதற்கில்லை" என்று பெரியவருக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:14 pm

30. அரங்கேற்றம்


பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய பெருவிழா ஒன்று கோ நகரில் நிகழ இருப்பதைக் கேட்டுச் சங்கப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியை நகருக்கு முரசறிந்து தெரிவிக்கும் கடமையுள்ளவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் ஏறி வீதிவீதியாகப் பரப்பினார்கள்.

"இளையபாண்டியர் சாரகுமாரருக்குப் புதிய இசையறிவிக்கும் பொருட்டுச் சிகண்டியாசிரியர் இயற்றியிருக்கும் இசைப் பேரிலக்கணம் அரங்கேற இருக்கிறது" என்ற செய்தி நாலா திசைகளிலும் நகரில் பரவியது. பாணர்கள் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திலும் செய்தி அறிவிக்கப்பெற்றுப் பரவியிருந்ததில் வியப்பில்லை. எல்லாப் பாணர்களுக்கும் மகிழ்ச்சியை விதைத்த இச்செய்தி ஒரே ஒருத்தியின் இதயத்தில் மட்டும் இனம்புரியாத கவலையை உண்டாக்கியது. பிறருக்கு விண்டுசொல்லி அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள முடியாத வேதனையாயிருந்தது அது. விழா நிகழும் முன்பாகவே தானும் தன் பெற்றோரும் கபாடபுரத்தை விட்டுப் புறப்பட்டு விடலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்யும் வழக்கத்தையுடைய பாணர்கள் - எல்லோரும் சேர்ந்து புறப்பட்டாலொழியத் தனியே புறப்பட இயலாது. அப்படிப் புறப்படுவதனால் தனிவழிப் பயணத்தில் பல துன்பங்கள் வரும். எனவே நகரணி மங்கல விழாவுக்கு வந்து அப்படியே தொடர்ந்து தங்கிய எல்லாப் பாணர் கூட்டமும் மிகச் சில நாட்களில் நடைபெற இருக்கும் சிகண்டியாசிரியரின் இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்கும் இருந்து கண்ட பின்பே புறப்பட எண்ணினர்.

'இடத்தின் மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம்' என்று பெரியபாண்டியர் தன்னிடம் இரைந்துவிட்டுப் போனதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள். பல காரணங்களால் அவள் மனத்தில் நிம்மதியில்லை. இந்நிலையில் இசையிலக்கண நூலரங்கேற்ற விழாவுக்கு இரண்டு நாளிருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் சாரகுமாரன் கடற்கரையில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அப்போது வெகு ஆர்வத்தோடு தேடி வந்த அவனிடம் இனிதாக முகம் கொடுத்துப் பேசாமல் தயங்கி நின்றாள் கண்ணுக்கினியாள்.

"இருந்தாற் போலிருந்து புதிராகிவிடுவதும் பெண்களுக்கு ஓரியல்பு போலிருக்கிறது" என்று குத்தலாகப் பேச்சைத் தொடங்கினான் சாரகுமாரன். அதற்கும் அவளிடமிருந்து மறுமொழி இல்லை. வேறுபுறம் திரும்பித் தலைகுனிந்தபடி நின்றாள் கண்ணுக்கினியாள். அவளுடைய மனமாறுதலுக்கும், மௌனத்துக்கும் காரணமாக என்ன நிகழ்ந்திருக்க முடியுமென்பதை அவனால் அநுமானிக்க முடியவில்லை. சிகண்டியாசிரியருடன் பெரியபாண்டியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவளை மருட்டியதும் வெருட்டியதும் அவனுக்குத் தெரியாது.

"சிகண்டியாசிரியருடைய இசையிலக்கணமே உன்னை இலட்சியமாகக் கொண்டுதான் பிறந்திருக்கிறது! இப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் போது நீ துயரப்படுவதன் காரணம்தான் எனக்குப் புரியவில்லை கண்ணுக்கினியாள்!" என்று மறுபடியும் அவன் அவளை அணுகிக் கேட்டபோது அவள் விழிகளில் நீர் திரளுவதைக் கண்டான். வார்த்தைகளால் விளக்கப்படாத அந்த மோனமான சோகம் அவன் இதயத்தை அறுத்தது. அழுகைக்கிடையே ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூறினாள்:

"இலட்சணங்கள் பிறக்கும் அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்."

"இருக்கலாம்! ஆனால் நீ பேசுகின்ற 'தொனி'யை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே?"

"இயல்புதானே? சொற்களைத்தான் விளங்கிக் கொள்ள முடியும். தொனிகளை உணரத்தான் முடியும்."

இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்த இளையபாண்டியன், "நல்லது! இனி நான் வந்த காரியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டியதுதான். இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்காக உன்னை அழைக்க வந்தேன். சிகண்டியாசிரியர் இலக்கண நூற்பாக்களை ஒவ்வொன்றாக அவையில் கூறி விளக்கியதும் அதற்கேற்ற முறையில் நானும் நீயும் இசைபாடி இலக்கணங்களுக்கு இலட்சியம் காட்ட வேண்டும்."

"நீங்கள் அரசகுமாரர்! எதற்கும் எந்த இடத்திலும் இலட்சண இலட்சியங்கள் கூற முடியும். நாங்கள் நாடோடிப் பாண்குடி மக்கள். எங்களுடைய பெருமையும், புகழ்களும், வரையறுக்கப்பட்ட எல்லையோடு நின்றுவிடக் கூடியவை. நாங்கள் சிலவற்றை அடையமுடிந்து பலவற்றை அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகள்" என்று அவள் கூறியபோது அழுகையும், விம்மலும் குரலை அடைத்தன.

"உன் மனத்தை யாரோ வலிய முயன்று கெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். அரங்கேற்ற விழாவுக்கு வா! அங்கே சிகண்டியாசிரியர் என்னைக் கூப்பிட்டுப் பாட வேண்டும்போது மறுக்காமல் யாழுடன் வந்து பாடு..." என்று வேண்டிக் கொண்டு அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே புரவியேறிப் புறப்பட்டுவிட்டான் சாரகுமாரன்.

அவனுடைய புரவி இருந்த இடத்தைவிட்டு மறைந்த மறுகணமே அவள் கோவென்று கதறியழத் தொடங்கினாள். அவளுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளர்ந்தது போலாயின. கடலையும், மணற்பரப்பையும், புன்னை மரங்களையும் அவற்றொடு தன்னைச் சூழ்ந்துவிட்ட தனிமையையும் உணர்ந்தவள் போல் நெடுநேரம் குமுறிக் குமுறி அழுது தீர்த்தாள் அவள். கடற்கரைக்கும் மனிதனுடைய சோகத்துக்கும் உலகு தொடங்கிய நாள் முதல் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையானால் இரங்கலையும், சோகத்தையும் பேசும் நெய்தல் திணையை ஏன் கடற்கரையாக அமைத்திருக்கப் போகிறார்கள்? தன் உணர்ச்சியின் வேதனைகள் எல்லாம் தீரும் வரை அங்கிருந்து அழுத பின்பே புன்னைத் தோட்டத்திற்குத் திரும்ப முடிந்தது அவளால்.

முதல் முதலாக நகரணி மங்கல விழாவிற்கு வருகிற வழியில் சாரகுமாரனைச் சந்திக்க நேர்ந்தது முதல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க முயன்றாள் அவள். அப்போது 'கபாடபுரத்து முத்து வணிகன்' என்று இளையபாண்டியன் தன்னைப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு. அப்போதும் அதற்குப் பின்பு சந்திக்க நேர்ந்த வேளைகளிலும் இருவருக்குமிடையே நிகழ்ந்த அழகிய உரையாடல்களை எல்லாம் தொகுத்து நினைவு கூர்ந்தாள். தேருலாவின் போது உலாக்கோலத்திலே சாரகுமாரனின் எழிற்கோலத்தைக் கண்ட காட்சி இன்னும் அவள் மனக்கண்களில் அப்படியே இருந்தது.

ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவளுடைய நினைவு அறுந்து சோகம் மீண்டும் தொடங்குகிற இடமாக வாய்த்தது, முதியபாண்டியரும், சிகண்டியாசிரியரும், சேர்ந்து வந்து தன்னைச் சந்தித்த சந்திப்பை நினைவு கூறுவது. அந்தச் சந்திப்பை நினைவு கூறுதலே மற்ற எல்லா இனிய நினைவுகளையும் அழிப்பதாக இருந்தது. அவளுடைய இனிய அநுராக நினைவுகளை எல்லாம் மறக்கச் செய்யும் பேரிடியாக இருந்தது பெரியபாண்டியரின் வரவும், வந்து தன்னிடம் உரையாடிய கடுமையான உரையாடலும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by முழுமுதலோன் Tue Feb 04, 2014 3:16 pm

31. யாழ் நழுவியது


கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட அங்கு எடுப்பாகத் தெரிய முடியாது போயிற்று. பெரியபாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக் கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளையபாண்டியன் மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளூற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர். பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார். பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரியபாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான்.

சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்பட வேண்டிய நிலையிலும் இருந்தார். முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்தது போலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாததுபோல் தோன்றியது.

கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சினேகிதியையோ காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவது போல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு. புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளையபாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார் சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான். புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மனநிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன.

இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன் பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான். அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன்.

அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவி கொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!" என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளையபாண்டியன். அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவளை அரங்கிற்குள்ளேயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"இலட்சணங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு. அரங்கேற்றம் முடிந்த பின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஓடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஓர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது. சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார். அரசவையைச் சேர்ந்த இசைப் புலவர்கள் அதற்கு மேற்கோள் பாடிக்காட்டத் தொடங்கினார்கள். பாடி முடிந்ததும், இளையபாண்டியன் நினைத்ததற்கு மாறாகச் சங்கப் புலவர்களும், அவையிலிருந்த அறிஞர் பெருமக்களும், அவனையும், அவனுடைய பாட்டனாரையும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். பாட்டனார் அவன் கையை அன்பாகப் பற்றிக் கொண்டு நிற்கிற பாவனையில் அவன் எங்கும் நழுவ முடியாதபடி பிடித்துக் கொண்டு விட்டார். புலவர்களின் புகழுரைகள் அவனுடைய செவியை நிறைக்கத் தொடங்கின.

"இளையபாண்டியருடைய குரலினிமைக்காகவே இப்படியோர் இசையிலக்கணம் தோன்றியது சாலப் பொருத்தமுடையதே" என்றார் ஒரு புலவர். "சிகண்டியாசிரியர் தருணமறிந்து இந்த இசையிலக்கண நூலை அரங்கேற்றியுள்ளார்" என்று புகழ்ந்தார் வேறோர் புலவர். யாருடைய வாயால் புகழக்கேட்டு மகிழவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டானோ அந்தப் புகழுரையைக் கேட்க முடியாமலிருந்தது. அவள் தன்னோடு வந்திருக்கும் பெற்றோர்களுடனும் பிற பாணர் கூட்டத்தினருடனும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னராவது அவளைக் கண்டு இரண்டு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால் முடியவில்லை.

நீண்ட நேரத்துக்குப் பின் அந்த அவையிலிருந்து அவனும், அவனைச் சுற்றிப் பெரியபாண்டியர், சிகண்டியார், தந்தை அநாகுலன், முதலியோருமாக வெளியேறியபோது, செல்லுகிற வழியில் கண்ணுக்கினியாள் நின்ற பகுதி வெறுமையாயிருந்தது. அவைக்கு வெளியே எங்குமே யாருமே இல்லை. ஆனால் இதென்ன? அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவளுடைய யாழ் அல்லவா கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது?

இளையபாண்டியன் பதற்றத்தோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பிரிந்து விலகிச் சென்று அந்த யாழை எடுத்தான். அது சற்றே கீறி உடைந்திருந்தது.

"யாருடைய யாழ் கீழே விழுந்தபோதெல்லாம் அவன் விரைந்து எடுத்தளித்திருந்தானோ அந்த யாழ் இப்போது கீழே விழுந்து உடைந்தேவிட்டது" என்ற உண்மை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. அது அவளுடைய யாழ்தான் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. விரக்தியிலோ, கோபத்திலோ, அல்லது தான் பார்க்கவேண்டுமென்பதற்காகவோ அவள் அதை அப்படி அங்கே போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இதை அநுமானம் செய்யும் போது பரிதாபத்துக்குரிய அந்த அரசகுமாரனின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் துடிதுடித்தது. நடுங்கும் கைகளால் அந்த யாழை எடுத்துச் சென்ற போது அவன் கால்கள் பின்னின. நடை தளர்ந்தது.

அந்த யாழ் ஒன்றாவது அவள் ஞாபகமாகத் தன்னிடமிருக்கட்டும் என்று அவன் அதை எடுத்து வருவதைக்கூடப் பொறுக்காமல், "இதென்ன உடைந்த யாழ் போலல்லவா தோன்றுகிறது? உடைந்த பொருள்கள் யாவும் அமங்கலமானவை. திருமகள் விலாசம் திகழும் அரண்மனை வாத்தியசாலையில் வைத்தற்குரிய தகுதி அமங்கலப் பொருள்களுக்கு என்றுமே இல்லை" என்று அதை இளையபாண்டியனிடமிருந்து வலியப் பறித்து அகழியில் எறிந்துவிட்டார் பெரியபாண்டியர். அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் சிகண்டியாசிரியர் கண்களை மூடிக்கொண்டார். இளையபாண்டியனோ பாட்டனார்மேல் வெறுப்புடனே ஒன்றும் எதிர்த்துப் பேச முடியாமல் இருந்தான். முடிந்தால் அன்றிரவோ, மறுநாள் காலையிலோ, கடற்கரைக்குச் சென்று அவளைக் கோபித்துக் கொள்ளவும் எண்ணினான்.

'கவிஞனின் எழுத்தாணியும் பாணர்களின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவவிடக்கூடாது' என்று நான் முன்பு கூறியதை மறந்து விட்டாயா? கையிலிருந்த யாழ் உடைவது போல் கீழே போட உனக்கு எப்படி மனம் வந்தது பெண்ணே? - என்றெல்லாம் இடித்துரைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆனால் அன்று மாலையோ இரவோ, அவன் எங்கும் போக முடியாமல் சிகண்டியாசிரியரும், பெரியபாண்டியரும் அவனுடனேயே இருந்துவிட்டனர். சிகண்டியாசிரியர் ஒன்றும் பேசவில்லை.

பெரியபாண்டியர் மட்டும், "ஓர் அரசகுமாரன் மலை குலைந்தாலும் நிலைகுலையாத திடசித்தமுடையவனாக இருக்கிற மனப்பக்குவம் பெற வேண்டும். கலைகளோ, கலைத்திறனோ அவன் தொழிலல்ல! கலைகளை அவன் இரசிக்கலாம். ஆனால் ஆண்மைதான் அவன் தேசத்தைக் காக்கும்" என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமின்றி உபதேசம் செய்யத் தொடங்கினார். பொறுமையாக அவற்றை அவன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

அன்றிரவு சாரகுமாரனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்ற ஆவலிலே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான் அவன். விடிந்ததும் பரபரப்பான மனநிலையோடு புரவியேறிக் கடற்கரைக்கு விரைந்தான் அவன். அங்கு சென்று அவன் கண்டதென்ன? கடற்கரைப் புன்னைத் தோட்டம் வெறுமையாயிருந்தது. அங்கு பாடியிறங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அருகே இருந்த மீனவர்கள் சிலரிடம் விசாரித்ததில் முதல் நாளிரவே அவர்கள் ஒழித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. அவன் தவித்தான். மனம் பதறினான். 'இலட்சணங்கள் பிறக்கும் அவசரத்தில் இலட்சியங்கள் அழிவதும் உண்டு' என்று அவள் கூறிய சொற்களையே மீண்டும் நினைத்தான். ஏதோ ஒரு பரபரப்பில் புரவியை விரைந்து செலுத்திக் கபாடங்களைக் கடந்து புறநகருக்கு வந்தான். 'அவளைப் பின் தொடர்ந்து பிடித்துவிடலாம்' - என்ற வெறியோடு பெரும் பாண்டிய ராஜபாட்டையில் சிறிது தொலைவு சென்றபின், 'அது சாத்தியமில்லை' என்று அவநம்பிக்கையோடு மீண்டும் தளர்ந்து திரும்பினான்.

எதிரே அவன் பாட்டனார் நிறுத்திய மாபெரும் புகழ்மிக்க செம்பொற் கபாடங்கள் வெயிலொளியில் மின்னுவது தெரிந்தது. எதிர்காலத்தில் பெயர் சொல்ல முடிந்த பல காரியங்களைச் சாதிக்க வல்ல சரித்திரத்தை உடைய அந்த இளம் ராஜகுமாரனின் இதயம் குருதிநீர் வடித்தது அந்த விநாடியில். மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு எந்த நாளும் உலகில் வடிவம் தந்து பாடமுடியாதென்று உணர்ந்தவன் போல் விரக்தியோடு அந்த வானளாவிய கபாடங்களை மீண்டும் அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது அழகிய விழிகளில் நீர் மல்கியது. இப்போது அவனுடைய மனமும் ஒரு கபாடம் ஆகிவிட்டது. மனத்துக்கினிய ஒருத்தியின் மிக இனிய நினைவுகளை உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ள வேண்டிய நிலைமையினால் அவனுடைய தலைநகரைத் தவிர அவன் மனமும் கூட ஒரு கபாடபுரம் ஆகிவிட்டது.

'எதிர்கால வரலாறு தன்னையும் - தனக்காகப் பிறந்த இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது?' என்றெண்ணியவாறே குதிரையை மெல்லச் செலுத்தியபடி மீண்டும் நகருக்குள் திரும்பினான் சாரகுமாரன். கோ நகரத்தின் மாபெரும் கபாடங்கள் திறக்கப்பட்ட அந்த இனிய வைகறை வேளையிலே அந்த அநுதாபத்துக்குரிய இளவரசனின் மனதுக்குள்ளே இரண்டு கபாடங்கள் மூடிக்கொண்டன. அந்த மூடிய கபாடத்துக்குள்ளே ஒரு நளின சங்கீதம் இடையறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு மூப்பில்லை. சோர்வில்லை. ஓய்வில்லை. உலைவில்லை. ஏனென்றால் இந்த உலகில் எந்த நாளும் மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை.


முற்றும்

நன்றி - [You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by rammalar Tue Feb 04, 2014 8:49 pm

கைதட்டல் கைதட்டல் 
-
[You must be registered and logged in to see this image.]
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கபாடபுரம் (சரித்திர நாவல்) - Page 2 Empty Re: கபாடபுரம் (சரித்திர நாவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum