தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தியாக பூமி-கல்கி பாகம்-4

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 11:55 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

நான்காம் பாகம் - இளவேனில்

"செந்தா மரை விரியத் தேமாங் கொழுந்தொழுக
மைந்தா ரசோகம் மடலவிழ...."
"மன்னுயிரெல்லா மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில்." - இளங்கோவடிகள்

4.1. சாருவின் பிரார்த்தனை

கீழ் வானம் வெளுத்தது. காலைப் பிறை, ஒளி இழந்து மங்கிற்று. அதனருகில் தோன்றிய சுக்கிரன் 'இதோ மறையப் போகிறேன்' என்று கண் சிமிட்டிச் சமிக்ஞை செய்தது.

கோழி கூவிற்று; குருவி சிலும்பிற்று; காகம் கரைந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நானாவிதமான பட்சி ஜாலங்கள் பற்பல ஸ்வரங்களில் பாடத் தொடங்கின.

விருட்சங்களிலும் செடிகளிலும் இருந்த பூ மொக்குகள், பட்சிகளின் இனிய கானத்தைக் கேட்டு ஆனந்தத்தினால் சிலிர்த்தன.

அந்தக் குளிர்ந்த அதிகாலை நேரத்தில் வீசிய இனிய இளந்தென்றல் சற்று விரிந்த பூ இதழ்களின் மீது தவழ்ந்து சென்று நாலு பக்கமும் நறுமணத்தைப் பரப்பிற்று.

பட்சிகளின் கீதத்துக்குச் சுருதி போடுவதுபோல் தூரத்தில் கடலின் 'ஹோ' என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

சம்பு சாஸ்திரி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மனோகரமான பூபாள ராகத்தில், "கௌஸ்ல்யா ஸுப்ரஜா ராமா" என்ற ராமாயண சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"தாத்தா! தாத்தா!" என்றாள் சாரு.

"முழிச்சுண்டயா, அம்மா! எங்கே, எழுந்து உட்காரு" என்றார் சம்பு சாஸ்திரி.

"நான் முழிச்சுக்கலை; இன்னும் தூங்கிண்டு தான் இருக்கேன்" என்றாள் சாரு.

"அப்படின்னா, தூங்கினபடியே, நேத்திக்கு ஸரஸ்வதி ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தேனே, அதைச் சொல்லு, பார்க்கலாம்" என்றார் சாஸ்திரி.

சாரு, உடனே எழுந்து உட்கார்ந்தாள். "எங்கே, சொல்லிக் கொடு தாத்தா, சொல்றேன்" என்றாள்.

சாஸ்திரிகள், "ஜய ஜய தேவி தயாலஹரி" என்ற கீதத்தை ஆரம்பித்துச் சொல்லிக் கொடுத்தார். சாருவும் சொல்லிக் கொண்டு வந்தாள். ஆனால், பாதிப் பாட்டில் திடீரென்று அவள் நிறுத்திவிட்டு, "தாத்தா! தாத்தா! கொஞ்சம் இரு, தாத்தா வர்றேன்!" என்று கூறிவிட்டு, வாசலில் ஓடினாள்.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "தாத்தா! இங்கே வாயேன், சீக்கிரம் வாயேன்" என்று சாரு வாசலிலிருந்து கூவுவதைக் கேட்டு, சாஸ்திரிகள் குடிசைக்கு வெளியே வந்தார்.

"பார்த்தாயா, தாத்தா! நம்மாத்துச் செடியிலே ரோஜாப்பூ பூத்திருக்கு. நேத்தி சாயங்காலம் மொட்டாயிருந்தது. இப்பப் பூவாய்ப் போயிடுத்து, தாத்தா!" என்று கூச்சலிட்டாள்.

சம்பு சாஸ்திரி, வைகறையின் மங்கிய வெளிச்சத்தில், அந்த மலர்ந்த ரோஜாவையும், சாருவின் மலர்ந்த முகத்தையும் மாறி மாறிப் பார்த்துச் சந்தோஷப்பட்டார்.

சாரு, பூவைத் தொடுவதற்குப் போனாள். கையை சுருக்கென்று முள் குத்தவே, "அப்பப்பா!" என்று கையை உதறினாள்.

"தாத்தா! நேத்திக்கு எங்க டீச்சர் கூடச் சொன்னா, ரோஜாப் பூவிலே முள் இருக்காப்பலே, சுகத்திலேயும் கஷ்டம் இருக்கும்னு. ஸ்வாமி என்னத்துக்காக, தாத்தா, இவ்வளவு அழகான பூச்செடியிலே கொண்டு போய் முள்ளை வைச்சிருக்கார்?" என்று கேட்டாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:20 pm

4.26. சந்திப்பு

சம்பு சாஸ்திரி முன் தடவை நெடுங்கரையிலிருந்து கிளம்பிச் சென்றதற்கும், இப்போது கிளம்பியதற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருந்தது. முன்னே அவர் தன்னந்தனியாகக் கிளம்பிச் சென்றார். ஊரிலுள்ளவர்கள் யாரும் ஏனென்று கேட்கவில்லை. ஆனால் இம்முறை அவர் சாருவுடன் கிளம்பியபோது, கிராம ஜனங்கள் பாதிப்பேர் அவர் பின்னோடு வெகு தூரம் வந்து வழி அனுப்பினார்கள். 
சாஸ்திரிகள், "நில்லுங்கள், நில்லுங்கள்" என்று பல தடவை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

"இனிமேல் நீங்கள் குழந்தையோடே இங்கேயே இருப்பயள், முன்மாதிரி பஜனையெல்லாம் நடத்தலாம்னு இருந்தோம்; அதுக்கு 
நாங்கள் கொடுத்து வைக்கலை" என்று முத்துசாமி ஐயர் சொன்னார்.

"அதுக்கென்னடா செய்யறது? நாம் செய்த பாக்கியம் அவ்வளவுதான்" என்றார் சாமாவய்யர்.

முத்துசாமி அய்யரும் சாமாவய்யரும் இவ்வளவு அன்பு காட்டினார்களென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும், குடியானவர்களுக்குத்தான் சாஸ்திரி ஐயா போவது ரொம்பவும் மன வருத்தத்தை அளித்தது.

"சாமி, எங்களை மறந்துடாதீங்க!"
"திரும்பிக் கட்டாயம் வந்துடணும்!"

"பட்டிக்காரர் கிட்டே, நாங்க ரொம்ப அவரை விசாரிச்சோம் என்று சொல்லுங்க, சாமி!" என்று இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு குடியானவர்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார்கள்.

கடைசியாக, ஊரின் எல்லையைத் தாண்டும் சமயத்தில், சாஸ்திரியார் அவர்களைப் படிவாதமாக நிற்கச் சொன்னார். பிற்பாடு, வண்டி துரிதமாகச் சென்றது.

வண்டி போய்க்கொண்டிருக்கையில், சாரு, "நான் போன ஜன்மத்திலே ரொம்பப் பாவம் பண்ணியிருப்பேன் போலிருக்கு, தாத்தா! இத்தனை நாளைக்கப்புறம், என்னை இடுப்பிலே எடுத்துக்கறதற்கு ஒரு பாட்டி கிடைச்சான்னு நினைச்சுண்டிருந்தேன். அவளையும் ஸ்வாமி அழைச்சுண்டுட்டாரே!" என்றாள்.

"உன் வாக்குப் பலிக்கட்டும், சாரு! ஸ்வாமி மங்களத்தினுடைய பாவத்தையெல்லாம் மன்னித்துத் தன்கிட்ட அழைச்சுக்கட்டும்" 
என்றார் சாஸ்திரி.

"என்ன தாத்தா, பாட்டியும் அப்படியே சொன்னா; நீங்களும் அப்படியே சொல்றேள்? பாட்டி என்ன பாவம் பண்ணினா?" என்று சாரு 
கேட்டாள்.

இதையெல்லாம் எப்படிக் குழந்தையிடம் சொல்வது என்று சாஸ்திரி தவித்தார். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு சொன்னார்: "ரொம்ப நாளைக்கு முன்னாலே உன்னைப்போல் ஒரு குழந்தை எனக்கு இருந்தா, அவ பேர் சாவித்திரின்னு சொன்னேனோ, இல்லையோ, அந்தக் குழந்தையைப் பாட்டி ரொம்பக் கஷ்டப்படுத்திண்டிருந்தா. அது அவள் மனத்திலே உறுத்திண்டே இருந்திருக்கு. அதனாலே தான் ஸ்வாமி என்னை மன்னிப்பாரான்னு கேட்டுண்டே இருந்தா. சாகிற சமயத்திலே உன்னைப் பார்த்ததும், சாவித்திரி 
குழந்தையாயிருந்தது மாதிரி அவளுக்குத் தோணித்துப் போலிருக்கு. அதனாலேதான், தன் மேலே கோபமில்லைன்னு உன்னைச் சொல்லச் சொன்னாள்..."

இப்படிச் சிரமத்துடன் கூறிவந்த சாஸ்திரி சட்டென்று நிறுத்தினார். அவர் மனத்தில் பளீரென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. சாருவை உற்றுப் பார்த்தார். அப்படியும் இருக்குமோ? அப்பேர்ப்பட்ட அதிசயம் நடக்கக் கூடியதா?...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:20 pm

4.27. 'ஜட்ஜு மாமா!'

சாருவுக்கு ஜில்லி கிடைத்ததில் உண்மையாகவே சந்தோஷந்தான். ஆனாலும், முன்னையெல்லாம் போல் அவளுடைய மனத்தில் குதூகலம் ஏற்படவில்லை. 'மாமியும் தாத்தாவும் உறவாய்ப் போய்விட்டார்கள்; நாம் தனியாய்ப் போய்விட்டோ ம்' என்ற எண்ணம் 
அவளுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. தானும் தாத்தாவுமாய் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டேயிருக்கக் கூடாதா, எதற்காக இங்கே வந்தோம் என்று கூடத் தோன்றியது.

முன்னைப்போல் சாரு இப்போது பங்களாவின் தோட்டத்தில் திரிந்து விளையாடுவதில்லை. பங்களாவுக்குள் தனியாக எங்கேயாவது 
ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள். சோகபாவம் ததும்பும் முகத்தோற்றத்துடன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாள். அல்லது, ஜில்லியை மடியில் வைத்துக் கொண்டு அதனிடம் தன்னுடைய மனக்குறையை வெளியிடுவாள். "மாமியும் தாத்தாவும் ஒண்ணு; நீயும் நானும் ஒண்ணு" என்பாள்.

இந்த மாதிரி ஒரு நாள் சாரு ஜில்லியை வைத்துக் கொண்டு சோகமான குரலில் அதனுடன் பேசிக் கொண்டிருந்த போது சாவித்திரி அங்கே வந்தாள். "சாரு! ஏன் இப்படித் தனியாகத் தனியாக வந்து உட்கார்ந்து கொள்கிறாய்? ஓடித் திரிந்து விளையாடறதுக்கென்ன?" என்று கேட்டாள்.

"என்னோடு விளையாடறதுக்கு யார் இருக்கா? நான் தான் தனிப்பட்டவளாய்ப் போய்ட்டேனே?" என்றாள் சாரு.

"என்ன சாரு! பெரிய பாட்டி மாதிரி பேசறே! நீ தனிப்பட்டவளாய்ப் போகவாவது? உன்னோட விளையாடறதற்கு நான் 
இருக்கேனே! வா! நாம் இரண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள் சாவித்திரி.
"இதோ பாரு! என் கண்ணைக் கட்டிவிட்டு, முன்னே ராத்திரியிலே எழுந்து ஓடிப் போனயே, அந்த மாதிரி ஓடிவிடக் கூடாது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். மறுபடியும், "ஆனால் இப்ப நீ எங்கே ஓடறது! தாத்தாதான் இங்கேயே இருக்காரே?" என்றாள்.

சாரு, இதற்குள் கண்ணைக் கட்டிவிட்டு, "ஊம்; ஒண்ணு, இரண்டு சொல்லுங்கோ!" என்றாள். சாவித்திரி, "ஒண்ணு, இரண்டு, மூணு..." என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, சாரு அந்த அறையிலிருந்து ஓடி ஆபீஸ் அறைக்குள் போனாள். அங்கே வக்கீல் ஆபத்சகாயமய்யர் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சாரு அவருக்குத் தெரியாமல் சத்தமில்லாமல் நடந்து ஒரு ஸோபாவுக்குப் பின்புறத்தில் ஒளிந்து கொண்டாள். ஒளிந்து கொண்டவள் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். 'தாத்தாவும் மாமியும் ஒண்ணாய்ப் போய்விட்டா. எனக்கு இப்போ ஓடறதுக்குக் கூட இடமில்லை' என்று எண்ணி அவள் மனம் ஏங்கிற்று.

சற்று நேரத்துக்கெல்லம் அந்த அறைக்குள் சாவித்திரி வந்தாள். "வக்கீல் ஸார்! சாரு இங்கே வந்தாளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

"இல்லையே, இங்கே வரலையே?" என்றார் வக்கீல். பிறகு, "பத்திரம் எழுதியாச்சு; கையெழுத்துப் போடலாம்" என்றார்.

உமா மேஜைக்கருகில் உட்கார்ந்து, "எங்கே வாசிங்கோ! கேட்கிறேன்" என்றாள்.

ஆபத்சகாயமய்யர் அடிக்கடி, "என்னிடம் நம்பிக்கை வையுங்கள்" என்று உமாராணியிடம் சொல்லிக் கொண்டிருந்தாரல்லவா? அதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வந்திருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல், கோர்ட்டில் குழந்தையைப் பற்றிக் கேள்வி கேட்டதிலிருந்து சாவித்திரி பெரிதும் கலக்கமடைந்து போயிருந்தாள், யாரிடமாவது யோசனை கேட்டே ஆகவேண்டுமென்று தோன்றிற்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:22 pm

4.28. கர்வ பங்கம்

பாரத் விலாஸ் ஹோட்டலின் அறையொன்றில் ஸ்ரீதரன் முன்னும் பின்னுமாக உலாத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனம் பெரிதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது என்பது நன்றாய்த் தெரிய வந்தது. அவனுடைய தலைமயிர் எப்போதும் போல் படிந்து அழகாக வாரிவிடப் பட்டிருக்கவில்லை. முகத்திலும் கவலைக் குறி காணப்பட்டது. அடிக்கடி வாய்க்குள்ளாக, "என்ன முட்டாள்தனம்! என்ன முட்டாள்தனம்?" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் மேஜையருகில் நின்று மேஜைமீது கிடந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் பார்த்தான். அதில், சம்பு சாஸ்திரி, சாரு இவர்களுடைய படங்கள் வெளியாகியிருந்தன. படங்களுக்குக் கீழே பின்வருமாறு எழுதியிருந்தது:

"நேற்று உமாராணி - ஸ்ரீதரன் வழக்கில் ஒரு முக்கியமான விஷயம் வெளியாயிற்று. சம்பு சாஸ்திரியின் வளர்ப்புக் குழந்தையான சாரு உண்மையில் அவருடைய பேத்தி, அதாவது உமாராணியின் குழந்தை என்று தெரிய வந்தது. விசாரணையின் போது, உமாராணிமேல் குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சமயத்தில், குழந்தை சாருவே மேற்படி இரகசியத்தை வெளிப்படுத்தியதும் கோர்ட்டில் பெரிய கலகலப்பு ஏற்பட்டது..."

ஸ்ரீதரன் இதைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடி நடக்கத் தொடங்கினான். சுவரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய பிரதிபிம்பத்தைப் பார்த்துவிட்டு, "ஸ்ரீதரா! நீ மகா கெட்டிக்காரன்! உன்னைப் போன்ற கெட்டிக்காரன் உலகத்திலேயே கிடையாது. உன் குழந்தையேதான் உனக்கு சர்டிபிகேட் கொடுத்து விட்டாளே? இனிமேல் உனக்கு என்ன குறை?" என்றான்.

நேற்று கோர்ட்டில் சாரு, "நானும் எத்தனையோ அப்பா பார்த்திருக்கேன். ஆனா, உங்களைப்போலே, அம்மா மேலே கேஸ் போட்ட அப்பாவைப் பார்த்ததேயில்லை" என்று சொன்னது அவன் மனத்தை அப்படி உறுத்திக் கொண்டிருந்தது.

இதே சமயத்தில், உமாரணியின், வீட்டு டிராயிங் ரூமில் இதே விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. உமாவும், சம்பு சாஸ்திரியும் ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். நல்லானும், அவனுடைய மனைவியும் கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.

நல்லான், உமாவைப் பார்த்து, "குழந்தையைக் கொன்னுட்டேன்னு ஒரே புளுகாய்ப் புளுகினீங்களே! எப்படி அம்மா உங்களுக்கு மனஸு வந்தது?" என்று கேட்டான்.

"இருக்கட்டும், நல்லான்! நான் ஊரைவிட்டுக் கிளம்பறபோது, இனிமேல் நீதான் ஐயாவைக் கவனிச்சுக்கணும்னு சொன்னேன், நீயும் சரி இன்னயே, அந்த வாக்கை நீ காப்பாத்தினயா?" என்றாள் உமா.

"அது எம்மேலே தப்புத்தான். எஜமான் நிலத்தை வித்துட்டாங்க என்கிற கோபத்திலே புறப்பட்டு வந்துட்டேங்க. ஆனா, நீங்கமட்டும் இத்தனை நாளாய் அப்பாவை அடியோடு மறந்துட்டு இருந்தீங்களே? அது மாத்திரம் சரியா?" என்றான் நல்லான்.

அப்போது சம்பு சாஸ்திரி குறுக்கிட்டு, "சரியாப் போச்சு! மறுபடியும் பழைய கதையையே எடுத்துட்டேளா? சந்தோஷமாயிருக்கிற சமயத்திலே போனதையெல்லாம் பத்தி ஏன் பேசறே, நல்லான்?" என்றார்.

"எல்லாம் சந்தோஷந்தாங்க. ஆனா, கோர்ட்டு, கீர்ட்டு, கேஸு, கீஸுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்களே அதுதான் நல்லா இல்லைங்க. மாப்பிள்ளை ஐயா முன்னப் பின்னே எதுவாச்சும் செய்திருந்தாலும், அதையெல்லாம் கொழந்தை பொறுத்துக்கிட்டுத்தான் போகணுங்க" என்றான் நல்லான்.

அப்போது நல்லான் மனைவி, "சரிதான், சும்மா இரு, அவங்களுக்குத் தெரியாததுக்கு நீதான் ரோசனை சொல்ல வந்துட்டே!" 
என்றாள்.

"இந்தா! உன்னை யாரு கேட்டா? நீ வாயை மூடிக்கிட்டிரு" என்றான் நல்லான்.

"அடாடா! எனக்காக பாவம், நீங்க சண்டை போட்டுக்காதேங்கோ" என்றாள் உமா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:23 pm

4.29. மீனாவின் கணவன்


'அந்த அம்மாள் என் அத்தை மீனாதான்!' என்று சாவித்திரி சொன்னதும், சம்பு சாஸ்திரி, "குழந்தை! கொஞ்சம் இரு! என்னமோ 
பண்ணுகிறது" என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.

சாவித்திரி கலவரமடைந்து, "டாக்டரை அழைச்சுண்டு வரச் சொல்லட்டுமா, அப்பா?" என்றாள். "வேண்டாம் அம்மா! எனக்கு உடம்பு ஒன்றுமில்லை; நெஞ்சுதான் படபடக்கிறது" என்றார்.

அப்போது சம்பு சாஸ்திரியின் மனக் கண்ணின் முன்பு சரியாக முப்பது வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் எதிரில் அப்போது நடப்பது போல் தோன்றியது. மீனாவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருஷம் ஆகிவிட்டது. அவளுடைய புருஷனைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. சிலர் அவன் அக்கரைச் சீமைக்குப் போய் விட்டானென்று சொன்னார்கள். வேறு சிலர் அவன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினார்கள். ராமச்சந்திரன் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபடியாலும், அந்தக் கல்லூரியை நடத்திய ரோமன் காதலிக் பாதிரிமார்கள் அப்போது மதமாற்றும் வேலையில் ரொம்பவும் தீவிரமாயிருந்தபடியாலும், அவன் கிறிஸ்தவனாகிவிட்டான் என்னும் வதந்தி நம்பக் கூடியதாயிருந்தது.

இந்த நிலைமையில், பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வரும் பிரசித்தமான மகாமக உத்ஸவம் வந்தது. சம்பு சாஸ்திரி தம்முடைய குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு கும்பகோணத்துக்குப் போனார். குடும்பத்தார், என்றால் சாஸ்திரியின் முதல் மனைவி பாக்கியம், தங்கை மீனா, வயதான அத்தை இவர்கள் தான். கும்பகோணத்தில் கடலங்குடித் தெருவில் சம்பு சாஸ்திரி ஜாகை போட்டிருந்தார். மகாமகத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே போய்விட்டார். மகாமகத்தன்று எல்லாரும் மாமாங்கக் குளத்திற்கு ஸ்நானம் செய்யப் போனார்கள். ஜனக் கூட்டம் ரொம்ப அதிகமாயிருந்தபடியால், ஒருவருக்கொருவர் பிரிந்து போனாலும் தனித் தனியாக ஜாகைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் திருட்டுப் பயத்தை உத்தேசித்து ஸ்திரீகள் நகை நட்டுகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வந்தார்கள். மாமாங்கக் குளத்தில் ஸ்நானம் செய்யும் வரையில் எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். கரையேறும்போதும் ஒன்றாக ஏறினார்கள். ஆனால், ஜாகைக்குப் போய்ச் சேர்ந்ததும் பார்த்ததில், மீனாவை மட்டும் காணோம்! கூட்டத்தில் பிரிந்து போயிருப்பாள், ஜாகைதான் தெரியுமே, தானே வந்துவிடுவாள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் வரையில் வராமற் போகவே கவலை உண்டாயிற்று. சாஸ்திரி மீனாவைத் தேடுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மனைவி பாக்கியம் ஓடி வந்து ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். கழற்றி வைத்த நகைகளை எடுத்துப் பூட்டிக் கொள்வதற்காக டிரங்குப் பெட்டியைத் திறந்ததாகவும், அதில் இந்தக் கடுதாசி இருந்ததாகவும் சொன்னாள். கடுதாசியில் பின் வருமாறு எழுதியிருந்தது:

'அண்ணா! இந்த ஜன்மம் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. நான் போகிறேன். நீயும் மன்னியும் என்னை மன்னித்து விடுங்கள். - மீனா.'

இதைப் படித்த சாஸ்திரி பைத்தியம் பிடித்தவர் போலானார். அந்த மகாமகக் கூட்டத்தில் கும்பகோணத்தின் வீதிகளில், "மீனா! மீனா!" என்று கூவிக்கொண்டு அலைந்தார். கூட்டத்தில் இடிபட்டோ , குளத்தில் மூழ்கியோ செத்துப் போனவர்களைப் போலீஸார் எடுத்துப் போட்டிருந்த இடத்துக்கெல்லம் ஓடி, மீனாவின் பிரேதமாய் இருக்குமோ என்று பதைபதைப்புடன் பார்த்தார். ஆனால், மீனாவோ அவளுடைய உயிரில்லாத உடலோ கிடைக்கவேயில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:24 pm

4.30. தீர்ப்பு


சென்னை ஹைகோர்ட்டின் சரித்திரத்தில், இந்த உமாராணி-ஸ்ரீதரன் வழக்கைப்போல் ஜனங்களின் மனத்தைக் கவர்ந்த வழக்கு வேறு நடந்ததில்லையென்று சொல்லலாம். நாலுபேர் கூடுமிடங்களிலெல்லாம் இதே பேச்சாகத்தான் இருந்தது. கேஸ் நடக்கும் தினங்களில் மாலை வேளையில் கடற்கரைக்குப் போனால், வெண் மணலில் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களுடைய பேச்சில் உமாராணி-ஸ்ரீதரன் என்ற பெயர்கள் அடிக்கடி கேட்கக் கூடிய நிலையில் இருந்தன. அநேகம் பேர், கையில் அன்று வந்த பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தினசரிகளில் 'லீகல் காலம்' என்று சொல்லப்படும் கோர்ட் நடவடிக்கைகள் பிரசுரிக்கும் பத்திக்கு இவ்வளவு முக்கியம் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.

இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு விஷயத்தில் ஸ்திரீகள் காட்டிய சிரத்தையேயாகும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்மணிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால், உடனே உமாராணியின் பேச்சுத்தான் கிளம்பும். அபிப்பிராய பேதங்கள் வாதப் பிரதி வாதங்கள் இல்லாமலில்லை. பொதுவாக, இளம் பெண்கள் எல்லாரும் உமாராணியின் கட்சி பேசினார்கள். "ஆமாம்; அவள் கேட்பது நியாயந்தானே? புருஷர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், அதற்குக் கேள்வி முறை கிடையாது; பொம்மனாட்டிகள் மட்டும் எப்போதும் அடிமையாயிருக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? அது என்ன நியாயத்தில் சேர்ந்தது? நன்றாய்ச் சொன்னாள், 'புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறே'னென்று!" - இம்மாதிரி படித்த யுவதிகளும், மாதர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாது சிரோமணிகளும் பேசினார்கள். பழைய கர்நாடகத்தில் பற்றுள்ள வயதான ஸ்திரீகளோ, "இது என்ன அநியாயம்? புருஷனுக்குப் பெண்டாட்டி ஜீவனாம்சம் கொடுக்கிறதாமே? அப்படி அந்த உமாராணி நடுக்கோர்ட்டிலே சொன்னாளாமே? என்ன இருந்தாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் ஆகுமோ?" என்றார்கள். இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தன.

சுதந்திர ஸ்திரீ சமாஜத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் சிலர் உமாராணியிடம் அநுதாபம் காட்டுவதற்காகப் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டுமென்றும், உமாராணியின் பக்கம் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதாக நீதிபதிக்கு ஒரு மகஜர் அனுப்ப வேண்டுமென்றும் முயற்சி செய்தார்கள். இம்மாதிரியெல்லாம் செய்வது 'கண்டெம்ப்ட் ஆப் கோர்ட்', அதாவது கோர்டை அவமதிக்கும் குற்றமாகும் என்று சிலர் எடுத்துக் காட்டியதன் மேல் மேற்படி முயற்சி கைவிடப்பட்டது.

இப்படி ஜனங்களிடையில் அளவில்லாத ஆவலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியிருந்த வழக்கில் கடைசியாகத் தீர்ப்புச் சொல்லும் நாள் வந்தது. அன்று சாயங்காலம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, காந்திமகான் கைதியான அன்று ஏற்பட்ட கிராக்கிக்குச் சமமாக இருந்தது.

நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் சாங்கோபாங்கமாக எடுத்து அலசி ஆராய்ந்து விட்டுக் கடைசியில் பின் வருமாறு தீர்ப்பை முடித்திருந்தார்.

"பிரதிவாதியாகிய ஸ்ரீமதி உமாராணி தம்முடைய கட்சியை மிகவும் பாராட்டத் தக்க முறையில் எடுத்துச் சொன்னார். அவருடைய வாழ்க்கை வரலாறு கல் நெஞ்சையும் உருக்கக் கூடியதாகும். ஹிந்து சமூக வாழ்க்கையிலுள்ள அநீதிகளுக்கு அவர் ரொம்பவும் உள்ளானவர் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. எல்லாவிதத்திலும் அவர் நம்முடைய அநுதாபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறார். தர்மமும் நியாயமும் பிரதிவாதியின் கட்சியில் தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, சட்டம் அவர் கட்சியில் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேணுமென்று அவர் கேட்பது தர்ம நியாயமாயிருக்கலாம்; ஆனால் அவருடைய கோரிக்கையை இப்போதுள்ள சட்டம் அங்கீகரிக்கவில்லை. சட்டம் பிசகானதாயிருந்தால், அதைத் திருத்த வேண்டியது சட்ட நிபுணர்கள் - அரசியல் வாதிகள் இவர்களுடைய கடமை. நான் இப்போது அமுலிலுள்ள சட்டத்தின்படிதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சாதாரணமாக, ஒரு புருஷன் தன்னுடைய மனைவி தன்னுடன் வசிக்க வேண்டுமென்று கோருவதற்குப் பாத்தியதை உண்டென்று சட்டம் சொல்கிறது. இந்த வழக்கில் பிரதிவாதியை வாதி கொடூரமாக ஹிம்ஸித்ததாய் ருசுவாகவில்லை. ஆகவே, உமாராணி என்கிற சாவித்திரி அம்மாள் அவளுடைய புருஷன் ஸ்ரீதரன் என்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்பளிக்கிறேன்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:25 pm

4.31. தியாகம்


அந்தப் புகழ்பெற்ற வருஷத்தில் பாரத புண்ணிய பூமியில் நிகழ்ந்து வந்த அதிசயங்களைப்பற்றி முன் ஓர் அத்தியாயத்தில் 
கூறினோமல்லவா? அந்த அதிசயங்களில் எல்லாம் மகா அதிசயம், பாரத நாட்டின் நாரீமணிகள் அந்த வருஷத்தில் கண் விழித்தெழுந்த அற்புதமேயாகும். அதற்கு முன்னாலும் தேசத்தில், "ஸ்திரீகளுக்குச் சுதந்திரம் வேண்டும்", "பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்" என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அந்த வருஷத்தில் அந்த மாதர் உரிமைக் கிளர்ச்சி ஒரு புதிய ஸ்வரூபம் பெற்றது. அதற்கு அந்தப் புதிய ஸ்வரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான் தான் என்று சொல்ல 
வேண்டியதில்லையல்லவா?

அதுகாறும், பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன் வந்தவர்கள், "உங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்", "ஆண்களுடன் சம உரிமைக்காகச் சண்டை பிடியுங்கள்" என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள். இந்த உபதேசங்களைக் கேட்ட பாரதப் புதல்விகள் சிலர்,

"கற்புநெறி யென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்றும்,

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்றும் சொல்லிப் பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.

இத்தகைய மனப்பான்மை பரவிக் கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி தோன்றி, தேசத்துக்கு எல்லாத் துறைகளிலும் புதிய வழி காட்டினார். "உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும்; நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள்" என்று அவர் சொன்னார். "தேச சேவையில் ஈடுபடுங்கள்; சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள். விலங்கில் விடுதலையை அடையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். "தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள்; உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும்" என்று அவர் உறுதி கூறினார்.

காந்தி மகானுடைய போதனைக்குப் பாரத நாட்டின் பெண்குலம் செவி சாய்த்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் தாய்நாட்டின் தொண்டில் ஈடுபட்டார்கள்; அவர்களில் பலர் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்; சிறை புகுந்தார்கள்; இன்னும் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.

இதனால், சாதாரணமாய் நூறு வருஷத்தில் நடக்கக் கூடிய பெண்குலத்தின் முன்னேற்றம் இந்த ஒரே வருஷத்தில் ஏற்பட்டது. வேறு நாடுகளில் எத்தனையோ காலம் ஸ்திரீகள் ஆண் மக்களுடன் போராடி, சண்டை பிடித்துப் பெற்ற உரிமைகளையெல்லாம் பாரதப் பெண்கள் அநாயாசமாகப் பெற்றுவிட்டார்கள். ஆண்களுடன் சரி நிகர் சமானமாக நின்று தேச விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்க எவ்விதம் மறுக்க முடியும்?

கோர்ட்டில் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், பொது ஜனங்களுடைய அநுதாபமெல்லாம் 
உமாராணியின் பக்கம் இருந்ததற்கு முக்கிய காரணம் மேற்கூறிய தேச நிலைமையேயாகும். இது உமாராணிக்கும் தெரியாமலில்லை. 
நாட்டில் நடந்து கொண்டிருந்த தேச விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்று சிறை புகுந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் உமாராணி அறிந்து தான் இருந்தாள். வழக்கில் தோற்றுப் போனால் என்ன செய்வது என்று அவளுடைய இருதய அந்தரங்கத்தில் தீர்மானம் செய்திருந்தாள்.

வேண்டாத புருஷனுடன் சேர்ந்து வாழும்படி சட்டம் நிர்ப்பந்தப்படுத்தலாம்; கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளிக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் அமுலுக்குக் கொண்டு வர முடியுமா? அது முடியாமல் செய்யும் வழி தனக்குத் தெரியும்! தேச சேவிகையர் படையில் சேர்ந்து சிறை புகுந்துவிட்டால், சிறைக்குள்ளே வந்து தன்னைச் சட்டம் கட்டாயப்படுத்தாதல்லவா? "சிறைக்குள் 
சுதந்திரத்தைக் காணுங்கள்" என்று மகாத்மா காந்தி சொன்னது மற்றையோர் விஷயத்தில் உண்மையோ, என்னமோ, தன் விஷயத்தில் அது முற்றும் உண்மையாயிருக்கும் என்று அவள் உறுதி கொண்டாள். சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் கட்டுப்பட்டு, ஸ்ரீதரனுடன் 
கூடிவாழ்ந்தால் அதுதான் அடிமை வாழ்வு; அதுதான் கொடிய சிறை வாழ்க்கை. இதற்கு மாறாக, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகச் 
சிறை புகுந்தால், அந்தச் சிறை வாழ்க்கையே உண்மையான சுதந்திர வாழ்க்கையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by முழுமுதலோன் Sat Feb 22, 2014 12:28 pm

4.32. சாந்தி

சென்னை நகரில் அப்போது அஹிம்சைப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தேசீய பஜனை ஊர்வலமும் சாத்துவிக 
மறியலும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை உத்தரவுகளை மீறி தேசத் தொண்டர்களும் தேச சேவிகளும் சிறை புகுந்து 
கொண்டிருந்தார்கள்.

அன்று சிறை புகுவதற்குத் தயாராய்க் கிளம்பிய தேச சேவிகைகளுடன் சாவித்திரியும் சேர்ந்து கொண்டாள். அவர்கள் தேசியக் 
கொடி பிடித்துக் கொண்டும், தேசிய பஜனை செய்து கொண்டும் சென்னை நகரின் வீதிகளில் ஊர்வலம் வந்தார்கள். கொஞ்ச 
நேரத்துக்கெல்லாம் அவர்களுக்கருகில் போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியுடன் வந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் தேச 
சேவிகைகளைக் கைது செய்து வண்டியில் ஏறச் சொன்னார்கள்.

வண்டி கிளம்பிக் கொஞ்ச தூரம் சென்றதும், கடை வீதியில் இன்னொரு போலீஸ் உத்தியோகஸ்தர் கையைக் காட்டி வண்டியை 
நிறுத்தினார். அந்த இடத்தில் ஜனக் கூட்டம் சேர்ந்திருந்தது. "இந்த வீதியில் தான் மறியல் நடக்கிறது" என்று கைதியான தேச 
சேவிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

வண்டி நின்ற இடத்தில், போலீஸ்காரர்களால் சூழப்பட்டுச் சில தேசத் தொண்டர்கள் நின்றார்கள். அவர்களையும் அந்த வண்டியில் 
ஏற்றிக் கொள்ள முடியுமா என்று கீழே நின்ற போலீஸ் உத்தியோகஸ்தர் கேட்டார். வண்டியோடு வந்த போலீஸ் ஸார்ஜெண்ட், 
'இடமில்லை' என்று சொல்லவே, வண்டி மறுபடியும் கிளம்பியது.

இப்படி போலீஸ் வண்டி அங்கே நின்ற ஒரு நிமிஷத்தில், சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு மகத்தான சம்பவம் நடந்துவிட்டது. 
வீதியில் கைது செய்யப்பட்டு நின்ற தேசத் தொண்டர்களின் மீது சாவித்திரியின் பார்வை சென்றபோது, அவர்களுக்கு மத்தியில் 
ஸ்ரீதரனும் நிற்பதைக் கண்டாள். அவனுடைய உடை மாறியிருந்தது போலவே முகத்தோற்றமும் மாறியிருப்பதைப் பார்த்தாள். 
சாவித்திரியின் தேகம் புளகாங்கிதம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் துளித்தது.

அதே சமயத்தில் ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் பார்த்தான். அங்கே தேச சேவிகைகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு 
அளவிலாத வியப்படைந்தான்.

சொல்ல முடியாத ஆதுரத்துடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பிரிந்தவர் கூடினால் பேசவும் 
வேண்டுமோ?" என்ற கவியின் வாக்குக்கு அப்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பொருத்தமாயிருந்தது. உண்மையில், 
இத்தனை நாளும் பிரிந்திருந்தவர்கள் அந்த நிமிஷத்திலே தான் ஒன்று கூடினார்கள். அதாவது, அவர்களுடைய இருதயங்கள் 
ஒன்றுபட்டன. இரண்டு ஜீவன்களுடைய இதயங்கள் ஒன்றுபட்டனவென்றால், அவர்களுடைய தேகங்கள் வட துருவத்திலும் தென் 
துருவத்திலும் இருந்தால் தான் என்ன? அவர்களை யாரால் பிரித்து வைக்க முடியும்?

அந்த நிமிஷத்தில் ஸ்ரீதரனுக்கும் சாவித்திரிக்கும் புனர் விவாகம் நடந்தது என்று சொல்லலாம். ஏற்கெனவே, பெரியோர்களுடைய 
வற்புறுத்தலினால் தேக சம்பந்தமான விவாகம் அவர்களுக்கு நடந்திருந்தது. இன்றைய சுபதினத்தில், அவர்களுடைய ஆத்மாக்கள் 
ஒன்றையொன்று மணந்து கொண்டன. இந்த ஆத்மீக விவாகத்துக்கு பாரத மாதாவும் காந்தி மகாத்மாவுமே சாட்சிகளாயினர்.

போலீஸ் வண்டிக்குள்ளிருந்த தேச சேவிகைகள், "ஜய ஜய பாரத!" என்று கோஷித்தார்கள். வெளியில் நின்ற தேசத் தொண்டர்கள், 
"மகாத்மா காந்திகி ஜே!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

மறுநாள் 'வஸந்த விஹார'த்தில் குழந்தை சாரு தனியாக உட்கார்ந்து சாவித்திரியின் படத்தை வைத்துக் கொண்டு, "அம்மா! 
என்னையும் நீ அழைச்சுண்டு போயிருக்கக்கூடாதா? நானும் உன்னோடே வந்து ஜெயிலிலே இருக்க மாட்டேனா?" என்று சொல்லிக் 
கொண்டிருந்தாள். அவளைத் தேடி வந்த சம்பு சாஸ்திரி, குழந்தையைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, "கண்ணே சாரு! ஒரே 
சமயத்தில் உனக்கு அப்பாவும் அம்மாவும் கிடைத்தார்கள். அவாள் இரண்டு பேரையும் ஒரே நாளில் இழந்துட்டே! ஆனால், நீ 
இதுக்காக வருத்தப்படாதே, குழந்தை! நல்ல காரியத்துக்குத்தான் அவாள் போயிருக்கா. சீக்கிரத்திலே திரும்பி வந்துடுவா. 
அதுவரைக்கும் நாம் நம்முடைய பழைய இடத்துக்கே போகலாம் வா, அம்மா! இந்தப் பங்களா எல்லாம் நமக்கு லாயக்கில்லை. சாவடிக் 
குப்பம் தான் நமக்குச் சரி!" என்றார்.


தியாக பூமி முடிந்தது.


[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தியாக பூமி-கல்கி பாகம்-4 - Page 2 Empty Re: தியாக பூமி-கல்கி பாகம்-4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum